ஆண்டிப்பட்டியிலிருந்து ஆரம்பிக்கும் கருவாடு மீனாகாது காளிமுத்து
சென்னை:
கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது போன்ற சூப்பர் வசன புகழ் மாஜி சபாநாயகர் காளிமுத்து அதிமுக அவைத்தலைவராகிய வேகத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் குதிக்கிறார். தனது பிரச்சாரத்தை அம்மாவின் தொகுதியானஆண்டிப்பட்டியிலிருந்து ஆரம்பிக்கிறார் மாஜி சபா.
திங்கள்கிழமை முதல் 18 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். இருதய அறுவைசிகிச்சை செய்தவர் என்பதால் அவரது பயணத்தை எளிதாக்க சிறப்பு வேனை அதிமுக ஏற்பாடு செய்து தந்துள்ளது.திராவிட இயக்கத்தின் தலை சிறந்த பேச்சாளர்களில் முக்கியமானவர் காளிமுத்து. தமிழ் இவரது நாவில் துள்ளி விளையாடும்.எந்தக் கட்சியில் இருந்தாலும் எதிரிகளைக் கூட மிகவும் சாமர்த்தியாக, சாதுர்யமாக அதே சமயம் மிகக் கடுமையாகவிமர்சிப்பதில் வல்லவர் காளிமுத்து.
கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது போன்ற சூப்பர் வசனங்களுக்கு சொந்தக்காரர் இவர். அவரது அனல் பறக்கும்பேச்சுக்களுக்கு ஈடான பேச்சாளர் தமிழகத்தில் மிகவும் சொற்பம்தான். கருணாநிதி, வைகோ போன்ற சிலர் மட்டுமே இவரைபேச்சில் சமாளிக்க முடியும் திறன் கொண்டவர்கள்.
இதைக் கருத்தில் கொண்டே நடக்கப் போகும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் பிரதான பிரசார பீரங்கியாக காளிமுத்துவைக்களம் இறக்கி விட்டுள்ளார் ஜெயலலிதா.
முக்குலத்தோரின் வாக்குகளை அப்படியே சிந்தாமல், சிதறாமல் அள்ளிக் கொண்டு வரும் ஒரு யுத்தியாகவும், திமுக தரப்பினரின்பிரச்சாரத்துக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாகவும், காளிமுத்துவை திடீரென அவைத் தலைவராக்கி களம் இறக்கிவிட்டுள்ளார் ஜெயலலிதா.
அம்மாவின் படைத் தளபதியாக தனது பிரசாரத்தை திங்கள்கிழமை முதல் தொடங்குகிறார் காளிமுத்து. அதையும்ஆண்டிப்பட்டியிலிருந்தே ஆரம்பிக்கிறார். அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு சென்னைக்கு வருகிறார்.
7ம் தேதி வட சென்னை, 8ம் தேதி திருவள்ளூர், 9ம் தேதி காஞ்சிபுரம் கிழக்கு, 10ம் தேதி காஞ்சிபுரம் மேற்கு, 13ம் தேதி வேலூர்கிழக்கு, 14ம் தேதி திருவண்ணாமலை தெற்கு, 15ம் தேதி விழுப்புரம் வடக்கு, 18ம் தேதி திருச்சி, 19ம் தேதி புதுக்கோட்டை, 20ம்தேதி மதுரை, 21ம் தேதி நெல்லை, 22ம் தேதி கோவை, 24ம் தேதி தென் சென்னை, 25ம் தேதி தர்மபுரி, 26ம் தேதி கிருஷ்ணகிரி,27ம் தேதி சேலம் என டைட் ஷெட்யூட் போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்யும் காளிமுத்து மார்ச் 2ம் தேதி நாமக்கல்லில் நடக்கும்பொதுக் கூட்டத்துடன் முதல் கட்ட பிரசாரத்தை முடிக்கிறார்.
அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடும் முதல் நபர் காளிமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications