போருக்கு தயாராகும் தாமரைக்கனி மகன்கள்
விருதுநகர்:
மறைந்த தாமரைக்கனியின் கோட்டையாக விளங்கி வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபைத் தொகுதியில், வரும் தேர்தலில் அவரதுமகன்கள் தங்கமாங்கனியும், இன்பத் தமிழனும் நேருக்கு நேர் மோதத் தயாராகி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை தனது அன்பால் பல காலம் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் தாமரைக்கனி.இத் தொகுதியின் எம்.எல்.ஏவாக ஐந்து முறை வென்று சாதனை படைத்தவர். தீவிர எம்.ஜி.ஆர். வெறியரான தாமரைக்கனி,எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகும் தொடர்ச்சியாக இருமுறை சுயேச்சையாக நின்று திமுக, அதிமுகவை வென்று சாதனைபடைத்தவர்.
காலப்போக்கில் ஜெயலலிதா தலைமையை ஏற்று அதிமுகவில் மீண்டும் இணைந்தார். ஆனால், அவருக்கும், ஜெயலலிதாவுக்கும்ஒத்துப் போகவில்லை. இந் நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த ஜெயலலிதாவுக்கு கூட்டம் கூடவில்லை.
இது குறித்து தாமரைக்கனியைக் கூப்பிட்டு தகாத வார்த்தைகளால் ஜெயலலிதா திட்டியதாக தாமரைக்கனியே குற்றம்சாட்டியுள்ளார். ஏன் கூட்டம் வரவில்லை என்ற ஜெயலலிதாவின் கேள்விக்கு, நீங்கள் வருவதாக போஸ்டர் அடித்து ஒட்டினேன்,ஆனால் யாருமே வரலை என்று பதில் சொல்விட்டு திரும்பி வந்தவர் தாமரைக்கனி.
இதையடுத்து அவரை கட்சியை விட்டுத் தூக்கினார் ஜெயலலிதா. இதைத் தொடர்ந்து திமுகவில் போய்ச் சேர்ந்தார். இதில்ஆச்சரியம் என்னவென்றால், விருதுநகர் மாவட்ட திமுக செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், தாமரைக்கனியும் பரம வைரிகள்.
கே.கே.எஸ்.எஸ்.ஆரின் முகத்தில் ஆசிட் ஊற்றியவர் தாமரைக்கனி. அந்த அளவுக்கு விரோதம். கடைசி வரை இருவரும்விரோதிகளாகவே இருந்தனர். ஆனால், தாமரைக்கனியை திமுகவில் சேர்க்க கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று ஒப்புக்கொண்டார் பெரிய மனது கொண்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
தாமரைக்கனி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அவரது மூத்த மகன் இன்பத் தமிழனை உரம் ஊட்டி வளர்த்தார்ஜெயலலிதா. தந்தைக்கு எதிராக கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் நின்று வென்றார் இன்பத் தமிழன். தாமரைக்கனி 3வதுஇடத்தைப் பிடித்து தோல்வியைத் தழுவினார்.
தொடர்ந்து வெற்றிகளைக் கொடுத்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் கடந்த முறை தந்தையைக் கைவிட்டு விட்டு மகனுக்கு கைகொடுத்தனர். அதன் பின்னர் தந்தையை தீவிரமாக எதிர்த்து அரசியல் நடத்தத் தொடங்கிய இன்பத் தமிழனை அமைச்சராகவும்ஆக்கினார் அம்மா.
அம்மாவைக் குளிர்விப்பதற்காக பெற்ற அப்பாவை மிகத் தீவிரமாக எதிர்த்தார் இன்பத் தமிழன். காவல்துறை மூலம்தாமரைக்கனி மீது பலமுறை தாக்குதல் நடந்தன. தம்பி தங்க மாங்கனி மீது மூன்று கொலை முயற்சி வழக்குகள் போடப்பட்டன.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக, தனது பெயரில் இருந்த அப்பாவின் இனிஷியலை நீக்கி முன்னுதாரமான ஒரு அமைச்சராகவிளங்கினார் இன்பத்தமிழன்.
இன்பத்தமிழனின் இந்த அதிரடி, வரவேற்பு பெறுவதற்குப் பதில் தொகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியையே தேடிக்கொடுத்தது. மேலும் இவரது ரவுடித்தனமும் தொகுதியில் பெரும் அதிருப்தியைத் தேடித் தந்துள்ளது.
ஆஃப்டர் ஆல் அரசியல் லாபத்துக்காக, பெற்ற தந்தையையே துறக்க துணிந்து விட்டாரே இன்பத் தமிழன் என்று அவரைஏளனமாகப் பார்க்கத் தொடங்கினர் தொகுதி மக்கள். ஆனால் இதைப் பற்றி இன்பத் தமிழன் கவலையே படவில்லை.
அத்தோடு நிற்கவில்லை இன்பத் தமிழன். தாமரைக்கனி உடல் நலம் குன்றி மரணப் படுக்கையில் இருந்தபோது பார்க்கக் கூடபோகவில்லை. தாமரைக்கனி இறந்தவுடன், அவரது உடலை எரியூட்டும் நிகழ்ச்சிக்குக் கூட மிகவும் அலட்சியமாக, தாமதமாகப்போய்ச் சேர்ந்தார் (போயஸ் கார்டனில் லேட்டாக அனுமதி கிடைத்தாக அப்போது செய்திகள் வந்தன)
இதுவும் தொகுதி மக்களிடையே இன்பத் தமிழனின் பெயரை ரிப்பேர் ஆக்கியது. இப்படி இன்பத் தமிழனுக்கு எதிராக அத்தனைஅம்சங்களும் இருப்பதைப் பயன்படுத்தி அவரை பழிக்கு பழி வாங்க களம் புகுந்துள்ளார் இன்பத் தமிழனின் தம்பியானதங்கமாங்கனி.
அரசியலில் தனது வாரிசு என்று தாமரைக்கனியால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் தங்கமாங்கனி. ஆனால் சைக்கிள்கேப்பில் இன்பத் தமிழன் புகுந்து அரசியல்வாதியாகவும், தொடர்ந்து அமைச்சராகவும் உயர்ந்து விட்டார்.
இப்போது தங்கமாங்கனி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர திமுக இளைஞர் அணி அமைப்பாளராக உள்ளார். அவருக்கு மாவட்ட செயலாளர்கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முழு ஆதரவாக இருக்கிறார். வரும் தேர்தலில் இன்பத் தமிழனுக்கு எதிராக தங்கமாங்கனியைநிறுத்த திமுக தலைமையிடம் பேசி முடிவெடுத்துவிட்டார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
இன்பத் தமிழனிடம், தொகுதியை இழந்த தாமரைக்கனிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இம்முறை நடக்கப் போகும் தேர்தலில்ஸ்ரீவில்லிபுத்தூரில் வென்றே தீருவேன் என்று சபதம் போட்டிருக்கிறார் தங்க மாங்கனி.
அதுவும் எங்கே போய்? தாமரைக்கனியின் சமாதியில்..
நீங்கள் விட்டுப் போன அரசியல் பாரம்பரியத்தை தொடருவேன். அமைச்சர் பதவிக்காக குடும்பத்தையே துறந்தஇன்பத்தமிழனுக்கு சரியான பாடம் கற்பிப்பேன். அரசியிலிருந்து மட்டுமல்லாமல் இந்த உலகிலிருந்தே உங்களை விரைவாகவெளியேற்றிய இன்பத்தமிழனை தோற்கடித்து இந்த ஊர் பக்கமே வராமல் ஓடச் செய்வேன் என ஆவேசமாக சபதம்போட்டுள்ளாராம் தங்கமாங்கனி.
தாமரைக்கனி மீதான தொகுதி மக்களின் பாசம், தந்தையின் இனிஷியல் நீக்கிய இன்பத்தமிழனின் அரசியல் கேவலச் செயல்,அடாவடிச் செயல்களால் ஏற்பட்டுள்ள அதிருப்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆரின் முழு ஆதரவு ஆகியவற்றால் இப்போதையநிலவரப்படி இன்பத்தமிழனை விட தங்கமாங்கனி பலம் மிக்கவராகத் தெரிகிறார்.
இதுவரை தந்தை-தனயன் இடையிலான சண்டையைப் பார்த்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் இம்முறை அனல் பறக்கும்அண்ணன்-தம்பி சண்டையை பார்க்க திகில் கலந்த ஆவலுடன் காத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications