திருச்சி அரசு மருத்துவமனையில் தீ விபத்து
திருச்சி:
திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று காலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 2லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சாம்பலாயின.
திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை அறுவைச் சிகிச்சை அரங்கம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த அறைக்கு அருகே உள்ள அறைகளில் தங்கியிருந்த நோயாளிகள், செவிலியர்கள் அலறி அடித்துக் கொண்டு ஒடினர்.தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள குளிர் சாதனப் பெட்டிகள், படுக்கைகள் எரிந்து சாம்பலாகிவிட்டன.
மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து நநிடந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை பாண்டி பஜாரில் தீ:
அதே போல சென்னையின் முக்கிய வணிகப் பகுதியான பாண்டி பஜாரில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின.
தி.நகரில் உள்ள பாண்டி பஜாரில் நூற்றுக்கணக்கான பெரிய மற்றும் சிறிய கடைகளும், நூற்றுக்கணக்கான நடைபாதைக் கடைகளும் உள்ளன.
பழக் கடைகள் முதல் கவரிங் நகைகள், பேன்சி பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை விற்கும் நடைபாதைக் கடைகள் இங்கு ஏராளமாக உள்ளன.
இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல் நடைபாதையில் உள்ள ஒரு புத்தகக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தீ மளமளவென அருகில் இருந்த மேலும் பல நடைபாதைக் கடைகளுக்குப் பரவியது.
தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட கடைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலாகிவிட்டன.
சமீப காலத்தில் இப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவது இது நான்காவது முறையாகும். யாரோ சில விஷமிகள் தான் வேண்டும் என்றே தீயை வைப்பதாக நடைபாதை வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications