சந்தானம் சஸ்பெண்ட்: ஆப்பு வைத்தார் கார்த்திக்
சென்னை:
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்திற்காக சந்தானம் எம்.எம்.ஏ. பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மிகுந்த வேதனையுடனும், மன வருத்தத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பார்வர்ட் பிளாக் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.அதிமுகவிடம் பார்வர்ட் பிளாக்கை வருடக்கணக்கில் அடமானம் வைத்தவர் சந்தானம். இதனால் அவர் மீது கட்சித் தலைமை எரிச்சலில் இருந்தது. இதையடுத்து அவருக்கு பாடம் புகட்டும் வகையில் நடிகர் கார்த்திக்கை தமிழக பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவாராக்கினார் தேசியத் தலைவரான பிஸ்வாஸ்.
அன்று முதலே சந்தானத்துக்கும் கார்த்திக்குக்கும் இடையே போர் வெடித்தது. அதிமுகவின் மிக முக்கிய ஜால்வாரான சந்தானம், கட்சித் தலைமையை மீறி போட்டிக் கூட்டங்கள் போட்டார்.
அதிமுகவுடன் தான் கூட்டணி என்றார். ஆனால், திமுகவுடன் தான் கூட்டணி என்ற முடிவுக்கு பிஸ்வாஸ் வந்தார். பிஸ்வாசின் கருத்தை கார்த்திக்கும் ஏற்றுக் கொண்டுவிட்டார்.
இதையடுத்து சந்தானத்தை பின்னால் இருந்து இயக்கிய அதிமுக, கார்த்திக்குக்கு எதிராக காய்களை நகர்த்தியது. பிஸ்வாஸைக் கண்டித்தும் பேச ஆரம்பித்தார் சந்தானம்.
இந் நிலையில் அவரை பார்வர்ட் பிளாக் மேலிடம் சந்தானத்தை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் நடிகர் கார்த்திக் பேசுகையில்,
சந்தானத்துடன் இணைந்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். ஆனால் என்ன காரணத்தாலோ அவருக்கு என்னைப் பிடிக்காமல் போய் விட்டது.
அகில இந்தியத் தலைவரான பிஸ்வாஸ் சென்னைக்கு வந்தபோது, அவரது உடல் நலம், மன நலம் பாதிக்கும் வகையில் மோசமாக நடந்து கொண்டார் சந்தானம் (ஒரு அறையில் வைத்து பிஸ்வாஸை பூட்டி வைத்தார் சந்தானம்).
இதனால் பிஸ்வாஸ் மன வேதனையுடன் கொல்கத்தா சென்று விட்டார். கட்சியின் விதிமுறைகள், கோட்பாடுகள், கொள்கைகள் என்னை விட சந்தானத்துக்குத்தான் அதிகம் தெரிந்திருக்கும். ஆனால் அவரது நடவடிக்கைகள் அப்படி இல்லை.
தொடர்ந்து சந்தானம் இப்படி நடந்து வந்ததால் விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர் சரியான பதில் தரவில்லை. இதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி விட மேலிடம் முடிவு செய்தது.
ஆனால் நான்தான் தலையிட்டு நிரந்தரமாக நீக்க வேண்டும், சஸ்பெண்ட் செய்தால் போதும் என்று உத்தரவை மாற்றினேன். இந்த சஸ்பெண்ட் முடிவு கூட எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
நான் பார்வர்ட் பிளாக் கட்சியில் சேர்ந்ததே, பிளவுபட்டுக் கிடக்கும் தலைவர்களை, பிரிவுகளை ஒருங்கிணைத்து புதிய, பலம் மிக்க அரசியல் சக்தியாக பார்வர்ட் பிளாக்கை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால் இப்போது ஒரு தலைவரை நாங்கள் இழக்க வேண்டியதாயிற்று. ஆனால் வேறு வழியில்லை.
நான் கருணாநதியை சந்தித்தது, மரியாதை நிமித்தமாகத்தான். கூட்டணி தொடர்பாக நானும், தலைவர் பிஸ்வாஸும் அவரிடம் எதையும் பேசவில்லை, பேசப் போவதும் இல்லை. யாருடன் தேர்தல் கூட்டணி என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் மத்திய, மாநிலக் குழு கூடி முடிவு செய்யும்.
நான் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் இல்லை. கட்சியைப் பலப்படுத்த, தேர்தலில் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்க தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். மேலும் கட்சிக்காக பல காலம் உழைத்தவர்கள் கட்சியில் நிறையப் பேர் உள்ளனர்.
அனுபவம் வாய்ந்த அவர்கள்தான் முதலில் உறுப்பினர்களாகி சட்டசபைக்கு செல்ல வேண்டும். எனவே நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். கட்டாயம் போட்டியிட்டே ஆக வேண்டும் என்ற நிலை வந்தால் அதுகுறித்து அப்போது யோசிப்பேன்.
முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். கொடுத்தால் சந்திப்பேன். விஜயகாந்த்துக்கு கூட்டம் அதிகமா, எனக்கு கூட்டம் அதிகமா என்பது குறித்து இப்போது ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாக இருக்காது, அதற்கான நேரமும் இதுவல்ல என்றார் கார்த்திக்.
அதிமுக ஆதரவுடன் சந்தானம் போட்டி:
கட்சியை விட்டு தூக்கப்பட்ட சந்தானம் அதிமுக ஆதரவுடன் போட்டியிடுவார் என்று தெரிகிறது.
சந்தானம் கூறுகையில், என்னை நீக்கியது குறித்து கவலைப்படவில்லை. மாநிலக் குழுவில் உள்ள 34 பேரில் 24 பேரின் ஆதரவுஎனக்கு உள்ளது. நான் தான் உண்மையான பார்வர்ட் பிளாக். தனிக் கட்சி தொடங்க மாட்டேன்.
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த கார்த்திக் நேரம் கேட்டிருப்பது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. நானும்ஜெயலலிதாவை சந்திப்பேன். ஆரம்பத்தில் இருந்தே அதிமுகவை ஆதரித்து வருகிறோம். அந்தக் கூட்டணி தொடர்கிறது.இதனால் எங்களுக்கே ஜெயலலிதா முதல் மரியாதை கொடுப்பார் என்றார்.












Click it and Unblock the Notifications