தனித்துப் போட்டி: தயாராகிறார் திருமாவளவன்
சென்னை:
திமுவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம். பேசாமல் தனித்துப் போட்டியிட்டால் என்ன என்ற சிந்தனைக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
வட தமிழகத்தில் பாமகவுக்கு நிகராக தாழ்த்தப்பட்ட மக்களிடையே நல்ல செல்வாக்குடன் உள்ள கட்சி விடுதலைச் சிறுத்தைகள். அதேபோல தென் மாவட்டங்களிலும் இக்கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது.அவருக்குப் போட்டியாக திகழும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு முன்பு போல இப்போது செல்வாக்கு இல்லை.
எனவே இப்போதைக்கு தமிழகத்தில் தலித் மக்களின் தனிப் பெரும் தலைவராக திருமாவளவன் திகழ்கிறார். அத்தோடு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் மிகவும் கட்டுக் கோப்பான சக்தியாக மாறியுள்ளது. இங்கு கோஷ்டிகள் இல்லை, குழப்பங்கள் இல்லை. திருமாவளவன் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே கேட்டு வருகிறார்கள் விடுதலைச் சிறுத்தையினர்.
இதைக் கருத்தில் கொண்டே மிகவும் சாதுரியமாக திருமாவளவனை தன் பக்கம் இழுத்துக் கொண்டார் டாக்டர் ராமதாஸ். அத்தோடு, விடுதலைச் சிறுத்தைகளை திமுக கூட்டணியில் சேர்க்கவும் பாடுபட்டு வருகிறார். ஆனால் இதுவரை விடுதலைச் சிறுத்தைகளை சேர்ப்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளிப்படையாக எதையும் சொல்ல மறுக்கிறார்.
இந் நிலையில், விடுதலைச் சிறுத்தைகளின் மத்திய குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் கட்சித் தலைவர்களுடன் தேர்தல் கூட்டணி தொடர்பாக விரிவாகவும், விளக்கமாகவும் ஆலோசித்தார் திருமாவளவன்.
அப்போது பேசிய திருமா, தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவும் சரி, அதிமுகவும் சரி, தலித் மக்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அவர்களுக்குத் தேவையானதெல்லாம் அவர்களது ஓட்டுக்கள் மட்டும்தான். தலித் கட்சிகளை அவர்கள் மதிப்பதே இல்லை.
இந் நிலையில் நமது மதிப்பை, செல்வாக்கை இரு கட்சிகளுக்கும் புரிய வைக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நமது கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றாக வேண்டும். அது ஒன்றுதான் நமது சக்தியை நாம் வெளிப்படுத்தக் கூடிய ஒரே வழி.
தேர்தல் ஆணைய சட்டத்தின்படி, சட்டசபைத் தேர்தலில 6 முதல் 8 சதவீதம் வரை வாக்கு சதவீதத்தைப் பெறும் கட்சிக்கு மட்டுமே தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை வழங்குகிறது (இப்போது விடுதலைச் சிறுத்தைகளுக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது).
எனவே வருகிற தேர்தலில் நாம் இந்த இலக்கை அடைய வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்.? ஏதாவது கூட்டணியில் சேர்ந்து கொண்டு ஒரு தொகுதியோ , இரண்டு தொகுதியோ வெற்றி பெறுவது நமது எண்ணமாக இருக்கக் கூடாது. கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது தான் நமது முதல் எண்ணமாக இருக்க வேண்டும்.
அதற்கு நாம் தனித்துப் போட்டியிட்டால்தான் சரியாக இருக்கும். தனித்துப் போட்டியிடுவதன் மூலம் இந்த வாக்கு சதவீதத்தை நாம் எட்ட முடியும். அப்படி நடந்தால் மாநலக் கட்சி என்ற அங்கீகாரம் கிடைக்கும். அதன் மூலம், மற்ற கட்சிகள் நம்மையும் மதிக்கும் நிலை உருவாகும்.
எட்டு சதவீத வாக்குகளைப் பெற வேண்டுமானால் குறைந்தது 20 இடங்களில் போட்டியிட்டாக வேண்டும். எனவே திமுகவா, அதிமுகவா என்று அலை பாய்ந்து கொண்டிருப்பதை விட நாம் யார் என்பதை மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டியது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் நம்மை சேர்க்க பாமக நிறுவனர் ராமதாஸ் இன்னும் தீவிரமாக முயற்சித்துக் கொண்டுதான் உள்ளார். இருந்தாலும் திமுக தலைமை மெளனம் சாதித்து வருகிறது. அப்படியே நம்மை கூட்டணியில் சேர்த்தாலும் எத்தனை சீட் தருவார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
எனவே நாம் திமுகவை மட்டும் நம்பியிருப்பதால் எந்தப் புண்ணியமும் இல்லை. அதிமுகவிலிருந்தும் இன்னும் சாதகமான பதிலோ, அழைப்போ வரவில்லை. எனவே தனித்துப் போட்டியிடுவதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார் திருமாவளவன்.
விடுதலைச் சிறுத்தைகள் தனித்துப் போட்டியிட்டால் அது அதிகவுக்குதான் சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போட்டியிட 234 தொகுதிகளுக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை 200 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொருவரும் தலா ரூ. 3,000 கொடுத்து விண்ணப்பித்துள்ளனர்.
பெண்களுக்கு ரூ. 2,500விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications