திண்டிவனம் கொடிக்கு கா.தே.கா. எதிர்ப்பு!
சென்னை:
திண்டிவனம் ராமமூர்த்தியின் கட்சிக் கொடி தனது கட்சிக் கொடியைப் போல இருப்பதால் அதற்கு காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியின் நிறுவனர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக உதவியுடன் தமிழ் நாடு இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியைத் ஹோட்டலில் வைத்து டீ சாப்பிட்டவாரே தொடங்கினார் திண்டிவனம்.கட்சிக்கு ஒரு கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். தேசியக் கொடியின் மூவர்ணம் மற்றும் நடுவில் காமராஜர் உருவப் படம் என திண்டிவனத்தின் கொடி அமைந்திருந்தது.
இந்தக் கொடிக்கு இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காமராஜர் தேசிய காங்கிரஸ் என்ற (திண்டிவனத்திற்கு முன்பே இந்தக் கட்சி பிறந்து விட்டது!) கட்சியின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான எம்.எஸ்.ராஜேந்திரன் இதுகுறித்துக் கூறுகையில்,
ராமமூர்த்தி தொடங்கியுள்ள கட்சியின் கொடி எங்களது கட்சிக் கொடி போலவே உள்ளது. வன்னியர், வன்னியர் என்று கூறி வரும் திண்டிவனம் ராமமூர்த்தி, காமராஜரின் படத்தை உபயோகப்படுத்த எந்த அருகதையும் இல்லை.
இந்திராவின் பெயரில் கட்சியை ஆரம்பித்து விட்டு காமராஜர் படத்தை பயன்படுத்துவதற்கு அவருக்கு யோக்கியதை இல்லை.
நாங்களும் இதேபோன்ற கொடியைத்தான் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து வைத்துள்ளோம். இதனால் இந்தக் கொடியை திண்டிவனம் ராமமூர்த்தி பயன்படுத்தக் கூடாது. மீறிப் பயன்படுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராஜேந்திரன்.
பேசாமல் முதல்வர் ஜெயலலிதா படத்தையே திண்டிவனம் தனது கொடியில் போட்டுவிடலாம் என்று கிண்டலடிக்கிறார்கள், வாசன் தரப்பினர்.












Click it and Unblock the Notifications