அரசியல் கட்சிகளுடன் கோபால்சாமி ஆலோசனை
கோவை:
தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆணையர் கோபாலசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக தேர்தல் ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக தேர்தல் ஆணையர் கோபாலசாமி தமிழகம் வந்துள்ளார். மதுரை, திருச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் இன்று காலை கோவையில் நீலகிரி, சேலம், ஈரோடு, கோவை, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படும். தமிழகத்தில் இப்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 4.49 கோடியாக உள்ளது.
மேலும் 19 லட்சம் பேர் புதிதாக சேர்க்க மனு செய்துள்ளனர். தமிழகத்தில் 30 மாவட்டங்களிலும் தேர்தல் அதிகாரிகளின் பதவிகள் காலியாக உள்ளன. இவை அடுத்த மாதம் முதல் வாரத்தில் நிரப்பப்பட்டுவிடும் என்றார்.
இதைத் தொடர்ந்து சென்னை கிளம்பிய அவர், அங்கு தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கிறது.
அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் கோபாலசாமி, வாக்காளர் பட்டியல் தொடர்பாக கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிகிறார்.
தமிழகத்தில், ஆளும் தரப்பினர் சார்பில் மீண்டும் ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, அவற்றை நீக்க மத்தியக் குழுவினர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தாவுக்கு உதவியாக சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்திர பிரகாஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தார்.
இவரது நியமனத்தை தலைமைச் செயலாளர் நாராயணன் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications
