ஜாமீன் நிபந்தனை: தளர்த்த கோரும் தனசேகரன்
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர். நகர் கூட்ட நெரிசல் பலி தொடர்பாக கைதாகி, நிபந்தனை ஜாமீனில் நாகர்கோவிலில் தங்கியுள்ள திமுக மாநகராட்சி கவுன்சிலர் தனசேகரன், தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மனு தாக்கல் செய்துள்ளாார்.
வெள்ள நிவாரண நிதிப் பெறக் காத்திருந்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு திமுகவினர் பரப்பிய வதந்தியே காரணம் என்று கூறி கே.கே.நகர் திமுக மாநகராட்சிக் கவுன்சிலர் தனசேகரன் கைது செய்யப்பட்டார். பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார்.இதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தனசேகரனுக்கு ஜாமீன் வழங்கியது. அதை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை உறுதி செய்தன.
மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் தனசேகரன் கைது செய்யப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றமும் தமிழக அரசையும் போலீசையும் கண்டித்தது.
இதையடுத்து தனசேகரன் விடுதலை செய்யப்பட்டார்.
முதலில் ஜாமீன் வழங்கிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நிபந்தனைப்படி, நாகர்கோவிலில் தனசேகரன் தங்க வைக்கப்பட்டார்.
அங்கு தங்கியுள்ள தனசேகரன் தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
இந் நிலையில், தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனசேகரன் மனு தாக்கல் செய்துள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தனசேகரனை ஆலந்தூர் தொகுதியில் அமைச்சர் வளர்மதிக்கு எதிராக நிறுத்த திமுக திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications