உயரத்தை அதிகரிக்க விடமாட்டோம்: கேரளா
திருவனந்தபுரம்:
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள முதல்வர் உம்மன் சாண்டி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக, கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தவும், அணையின் பராமரிப்புப் பணிகளை தமிழக அரசிடம் முழுமையாக ஒப்படைக்கவும் கேரளாவுக்கு இன்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.இந்தத் தீர்ப்பு குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி கருத்து தெரிவிக்கையில், அணையின் உயரத்தை அதிகரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரத்தையும் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசிப்போம்.
அதன் பின்னர் உச்சநீதிமன்ற மறு ஆய்வுக் கமிட்டியிடம் தீர்ப்பை எதிர்த்து விண்ணப்பிப்போம்.
கேரள மக்களின் நலன் எந்த விதத்திலும் புறக்கணிக்கப்படாத வகையில், பாதிக்கப்படாத வகையில் செயல்படுவோம். தொழில்நுட்ப நிபுணர்களின் கருத்துப்படியே அணையின் உயரத்தை 136 அடியாக பராமரிக்க முடிவு செய்தோம்.
எனவே அணையின் உயரத்தை அதிகரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார் சாண்டி.
ஏற்கனவே, காவிரி பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த பல உத்தரவுகளை கர்நாடக அரசு கிடப்பில் போட்டு விட்டது.
உச்சநீதிமன்றத்தை மதிக்காத காரணத்தால் முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளானது நினைவிருக்கலாம்.
தற்போது கேரள அரசும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அணையின் உயரத்தை அதிகரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications