உபியில் சென்னை போலீஸார் மீது கடும் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அமைச்சர் வேங்கடபதியின் உறவினர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு விசாரணை நடத்த சென்றுள்ள சென்னை போலீஸ் குழு மீது ரவுடிகள் பெரும் தாக்குதல் நடத்தினர்.

தமிழக போலீஸாரின் பிடியில் இருந்தவரை அந்தக் கும்பல் மீட்டுச் சென்றது.

சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் நாகராஜன். சென்னையில் மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதியின் உறவினர் ஆவார்.

இவர் சில காலம் வேங்கடபதியிடம் உதவியாளராக டெல்லியில் பணியாற்றினார். அப்போது வேங்கடபதியின் அலுவலகத்தில் பணியாற்றிய லட்சுமி சிங் என்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கும் நாகராஜனுக்கும் தொடர்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அந்த அதிகாரி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், அதை லட்சுமி சிங்கின் குடும்பத்தினர் எதிர்த்தனர் என்றும் தெரிகிறது. இதையடுத்து அவர் உத்தரப் பிரதேசதுத்துக்கே பணிமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டார். அங்கு லக்னெளவில் அவர் எஸ்பியாக உள்ளார்.

அதே போல நாகராஜனும் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டார். ஆனாலும் அந்தப் பெண் அதிகாரிக்கும் நாகராஜனுக்கும் தொடர்பு நீடித்துள்ளது.

இந் நிலையில் கடந்த 20ம் தேதி இரவு நாகராஜனை 2 பேர் கொண்ட கும்பல், சென்னையில் அவரது நிறுவனத்தின் அருகே வைத்து துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பியது.

குண்டுக் காயம் அடைந்த நாகராஜன் சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்தார். அவரை சுட்டது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

துணை ஆணையர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. முதலில் நாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் தான் நாகராஜனுக்கும், லட்சுமி சிங்குக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இந்தக் காதலை லட்சுமியின் அண்ணன் திக்விஜய் சிங் மற்றும் தாயார் நயன்தாரா ஆகியோர் தீவிரமாக எதிர்த்து வந்த நிலையில், திக்விஜய் சிங் தான் கூலியாட்களை ஏவியோ அல்லது நேரடியாக வந்தோ நாகராஜனை சுட்டிருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகப்பட்டனர்.

இதையடுத்து துணை ஆணையர் அருண் தலைமையில் தனிப்படை போலீஸார் லக்னெள விரைந்தனர். அங்கு எஸ்.பி. லட்சுமி சிங்கிடம் விசாரணை நடத்தினர்.

நாகராஜன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என லட்சுமி மறுத்து விட்டார்.

இதையடுத்து அவரது அண்ணன் திக்விஜய் சிங்கிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். துப்பாக்கி உள்ளதா என்று கேட்டபோது, உள்ளது என்று திக்விஜய் சிங் கூறியுள்ளார். அதற்கான உரிமத்தைக் காட்டுமாறு கேட்டபோது காட்ட முடியாது என திக்விஜய் சிங் மறுத்துள்ளார்.

இதையடுத்து அவரை அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்னை போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இந் நிலையில் திக்விஜய் சிங்கின் தாயார் நயன்தாரா (இவர் அப்பகுதி வழக்கறிஞர் சங்கத் தலைவர்) 20க்கும் மேற்பட்ட ரவுடிகளைக் கூட்டிக் கொண்டு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். உள்ளே நுழைந்த அக்கும்பல், சென்னை போலீஸாரைத் தாக்கத் தொடங்கியது.

இதையடுத்து போலீஸார் தற்காப்புக்காக துப்பாக்கிகளை எடுத்தவுடன், அக்கும்பல் தாக்குதலைக் கைவிட்டு விட்டு திக்விஜய் சிங்கை போலீஸ் பிடியிலிருந்து அழைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியது.

நயன்தாராவின் இந்தச் செயலும், தாக்குதல் சம்பவமும் தமிழக போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து அந்தப் பிராந்திய டிஐஜி சுபாஷ் சந்திராவிடம் சென்னை போலீசாார் புகார் செய்தனர். உடனடியாக நயன்தாரா, திக்விஜய் சிங் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய டிஐஜி சுபாஷ் சந்திரா உத்தரவிட்டார்.

இனிமேல் தமிழக போலீஸாருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

விசாரணைக்காக சென்ற சென்னை போலீஸார் மீது ரவுடிக் கும்பல் தாக்குதல் நடத்தியது தமிழக போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+