அதிமுக கூட்டணியில் திருமா: 9 சீட்கள் ஒதுக்கீடு
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவனை முதல்வர் ஜெயலலிதா இன்று அவசரமாகக் கூப்பிட்டு கூட்டணி உடன்பாடு கண்டார். விடுதலைச் சிறுத்தைகளுக்கு 9தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது.
கருணாநிதியை மிகக் கடுமையாக விமர்சித்தபடியே பாமக மூலமாக திமுக கூட்டணியில் சேர முயன்றார் திருமா. ஆனால், அதை கருணாநிதி ஏற்கவில்லை.
திருமாவை திமுக கூட்டணிக்குக் கொண்டு வர டாக்டர் ராமதாஸ் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. வேண்டுமானால், பாமகவில் உள் ஒதுக்கீடு கொடுத்தால் அதை ஏற்பதாகக் கூறிவிட்டார்.
இதை திருமாவளவன் ஏற்கவில்லை. இந் நிலையில் அதிமுக அழைத்தால் கூட்டணிக்குத் தயாராக இருப்பதாக திருமாவளவன் கூறி வந்தார்.
ஆனால், தன்னுடன் மதிமுக இணையும் என்ற மிதப்பில் இருந்த அதிமுகவும் திருமாவளவனைக் கண்டு கொள்ளவில்லை. இந் நிலையில் திமுகவிலேயே தொடர்வதாக அறிவித்து அதிமுகவுக்கு ஷாக்கொடுத்தார் வைகோ.
இதையடுத்து திருமாவளவனிடம் அவசரமாகப் பேசி அவரை கூட்டணிக்குக் கொண்டு வந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்று இன்று அவரை போயஸ் தோட்ட இல்லத்தில் திருமாவளவன் நேரில் சந்தித்துப் பேசினார். அவருடன் இணை பொதுச் செயலாளர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்களும் சென்றிருந்தனர்.
அப்போது தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
9 தொகுதிகள்:
அதிமுக அணியில் இணைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகளுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவருடன் இணை பொதுச் செயலாளர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்களும் சென்றிருந்தனர்.
இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகளுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொள்ளும் ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும், திருமாவளவனும் கையெழுத்திட்டனர்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகளுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீடு செய்து கொண்டுள்ள முதல் கட்சி விடுதலைச் சிறுத்தைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தன்னால் விடுதலைச் சிறுத்தைகளுக்கு திமுக கூட்டணியில் இடம் வாங்கித் தர முடியவில்லை என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
செங்கல்பட்டில், எஸ்.சி, எஸ்.டி பிரிவு அரசு ஊழியர் சங்க சிறப்பு மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ், நானும் திருமாவளனும் சேர்ந்துபோராட வேறு எத்தனையே களங்கள் உள்ளன என்றார்.
இதன் மூலம் அரசியல் களத்தில் இனியும் அவருடன் கைகோர்க்க முடியாது என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
இதன்மூலம் அதிமுக கூட்டணியில் தற்போது திருமாவளவன், திண்டிவனம் ராமமூர்த்தி, புதுவை கண்ணன் ஆகியோர் உள்ளனர். இவர்களில் திண்டிவனமும், புதுவை கண்ணனும் வன்னியர் சமுதாயத்தினர்என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தீரனும், வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் சுகந்தனும் புதிய கட்சிகள் ஆரம்பித்து விரைவில் அதிமுக கூட்டணிக்கு வரவுள்ளனர்.
கூட்டணி அமைக்க பெரிய கட்சிகள் ஏதும் கிடைக்காத நிலையில், குட்டிக் குட்டிக் கட்சிகளை சேர்த்துக் கொண்டு திமுகவின் 7 கட்சிக் கூட்டணியை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஜெயலலிதாதள்ளப்பட்டுள்ளார்.
இதனால் கடைசி நேரத்தில் பாஜகவையும் கூடச் சேர்த்துக் கொள்வார் என்று தெரிகிறது. யாராவது கூப்பிட மாட்டார்களா என்று பாஜக ஏக்கத்துடன் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
பாமக உறவு தொடரும்: திருமா
ஜெயலலிதாவை சந்தித்த பின் பேசிய திருமாவளவன், இந்தக் கூட்டணி மன நிறைவளிக்கிறது. 9 தொகுதிகள் எவை, எவை என்பது சில நாட்களில்முடிவாகிவிடும்.
அதிமுக கூட்டணியால் பாமக உறவு பாதிக்காது. அந்த நட்பு தொடரும். என்னைத் தொடர்ந்து பாமகவும் அதிமுகவுக்கு வருவதை ஜெயலலிதா தான் முடிவுசெய்ய வேண்டும். அது திமுகவின் அணுகுமுறையைப் பொறுத்தது என்றார்.
கருணாநிதி மீது தாக்கு:
முன்னதாக நேற்று பாண்டிச்சேரியில் மீனவர் மாநாட்டில் பேசிய திருமாவளவன், திமுகவை மிகக் கடுமையாகத் தாக்கினார்.
2001ல் கருணாநிதி கேட்டுக் கொண்டதால் அவருடன் கூட்டணி அமைத்தேன். இந்தத் தேர்தலில் எங்கள் உணர்வுகளை புரிந்து கை கோர்ப்பவர்கள் யார் என்று பார்ப்போம். அதனால் தான்இன்னும் கூட்டணி விஷயத்தில் முடிவெடுக்காமல் உள்ளோம்.
நாங்கள் காத்திருப்பது பாமகவுக்காகத் தான், திமுகவுக்காக அல்ல. பாமக உள் ஒதுக்கீடு தந்தால் வரவேற்போம் என கருணாநிதி கூறியுள்ளார். இது பந்தியில் இடமில்லை, எச்சிலை சாப்பிடு என்பதற்கு சமம்என்றார்.












Click it and Unblock the Notifications