வைகோ-இ.கம்யூவுக்கு அதிமுக மீண்டும் வலை!
சென்னை:
திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் சிக்கல் நீடிக்கிறது. உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை என்று மதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிப்படையாக அறிவித்துள்ளன.
மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பெரும் அதிருப்தியில் உள்ளன.கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் கேட்கும் எண்ணிக்கையைத் தர திமுக தயாராக இல்லை. மதிமுகவைப் பொறுத்தவரை அவர்கள் கேட்கும் தொகுதிகளைத் தர திமுக மறுக்கிறது.
அதேசமயம், பாமக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அவர்களுக்குத் திருப்தியான வகையில் தொகுதிகளை ஒதுக்க திமுக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தங்களது நிலையிலிருந்து சற்றும் இறங்கி வராமல் மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை அதன் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன் தீவிரமான அதிமுக ஆதரவாளர். அவரை அடக்கி வைத்திருப்பது நல்லகண்ணு தான்.
கட்சியின் மிக மூத்த தலைவரும், அனைத்துத் தரப்பினராலும் பெரிதும் மதிக்கப்படும் மிக நாகரீகான அரசியல்வாதியான நல்லகண்ணு தான் அதிமுகவுடன் கூட்டணி கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
தா.பாண்டியன் இப்போது கூப்பிட்டாலும் அதிமுக கூட்டணிக்குப் போகத் தயாராக இருக்கிறார். இதனால் திமுகவுடனான தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தைகளில் மிகவும் கறாராகப் பேசி வருகிறார்.
இதனால் அவரை விட நல்லகண்ணுவையே கருணாநிதி அதிகம் நம்பியுள்ளார்.
இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவரான ஏ.பி.பர்தனை அதிமுக தலைமை மாஜி பிரதமர் தேவே கெளடா மூலம் தொடர்பு கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
கெளடாவுக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் உள்ள நெருக்கம் உலகறிந்தது.
கெளடா மூலமாக இந்திய கம்யூனிஸ்டையும் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டையும் அதிமுகவுக்கு இழுக்க முயற்சி நடக்கிறது. ஆனால், மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத், ஜெயலலிதா அரசை வெறுப்பவர். அதே போல மார்க்சிஸ்ட் கட்சியின தமிழகத் தலைவர்களும் ஜெ அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால் அந்தக் கட்சி கூட்டணிக்கு வர வாய்ப்பு மிக மிகக் குறைவு. அதே போல பர்தனின் வலது கரமான அக் கட்சியின் மூத்த தலைவர் ராஜாவும் அதிமுகவை வெறுப்பவர்.
தமிழகத்தைச் சேர்ந்த ராஜா, திமுக கூட்டணியிலேயே தொடர வேண்டும் என்று கூறி வருகிறார். இதனால் கெளடா மூலமாக ஜெயலலிதா தரும் பிரஷ்ஷரை ராஜா மூலமாக திமுக டெல்லியில் கெளண்டர் செய்து வருகிறது.
இடதுசாரிகள் விவகாரம் இப்படி இருக்க, திமுகவை மிகவும் டென்சனில் ஆழ்த்தியிருப்பது மதிமுக தான்.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, ஆற்காடு வீராசாமி சந்தித்துப் பேசியும் பலன் ஏற்படவில்லை.
மேலும், வைகோ வீட்டில், கூடிய மதிமுக முன்னணித் தலைவர்கள், அதிமுகவுக்கே போய் விடலாம் அங்கு 40 தொகுதிகள் வரை தரத் தயாராக இருக்கிறார்கள் என்று வைகோவிடம் கூறி குழப்பி வருகின்றனர்.
ஆனால், அதிமுகவுடன் எக்காலத்திலும் கூட்டு சேரக் கூடாது என்று வைகோவை அவரது தாயார் மாரியம்மாள் தடுத்து வருகிறார். இப்போது கூட்டணியில் சேர்த்துக் கொண்டாலும், மேடைகளில் வைகோ வைகோ என்று எல்லோரும் பேசுவதை ஜெயலிலதாவின் மனம் ஏற்காது. இதனால் கடைசி நேரத்தில் கூட்டணியை விட்டு மதிமுகவை கழற்றிவிடவும் வாய்ப்பு உள்ளது.
மேலும் பொடாவில் உன்னை வதைத்த ஜெயலலிதாவுடன் நீ கூட்டு வைப்பதை என்னால் மட்டுமல்ல தொண்டர்களாலும் ஜீரணிக்க முடியாது என்று தாயார் மாரியம்மாள் கூறியுள்ளார்.
இதனால் வைகோ பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து போய் இருக்கிறார். இந்தக் குழப்பத்தையே தனக்கு சாதகமாகத் திருப்ப அதிமுக தீவிரமாக முயன்று வருகிறது.
நடராஜனின் ஆரம்பித்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, உளவுப் பிரிவினர் என பல தரப்பையும் பயன்படுத்தி வைகோவை வளைக்க முயற்சி நடக்கிறது.
இந் நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக மதிமுக அவைத் தலைவரும் சசிகலாவின் தூரத்து உறவினரும் அதிமுக கூட்டணியை ஆதரிப்பவருமான எல்.கணேசனிடம் கேட்டபோது, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் முடியவில்லை.
அப்படியேதான் இருக்கிறது. தொடர்ந்து பேசி வருகிறோம். இதுவரை சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றார். பொத்தாம் பொதுவாக கணேசன் கூறுவதைப் பார்க்கும்போது தொகுதிப் பங்கீட்டில் சாதாரண சிக்கல் இல்லை, பெரும் இடியாப்பச் சிக்கலே இருப்பது உறுதியாகிறது.
இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், தொகுதிப் பங்கீடு குறித்து சொல்லிக் கொள்ளும்படி இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து பேசி வருகிறோம். இப்போது திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம். முழு வீச்சில் பிரசாரத்தில் ஈடுபடத் தயாராகி வருகிறோம் என்றார்.
மதிமுகவும் இடதுசாரிகளும் தொடர்ந்து அதிருப்தியில் இருப்பதால், நாளை தொடங்கும் திருச்சி திமுக மாநில மாநாட்டில், திட்டமிட்டபடி கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை அறிவிக்க முடியாத நிலையில் கருணாநிதி உள்ளார்.
வைகோவுக்கு காளிமுத்து மீண்டும் அழைப்பு:
இதற்கிடையே தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து கூறுகையில்,திமுக கூட்டணி பறவைக் காய்ச்சல் கண்ட கோழிப் பண்ணை போல பரிதாமாக காட்சியளிக்கிறது. நான் வருதப்படுவதெல்லாம்சகோதரர் வைகோவை எண்ணித்தான்.
ராமாயண இந்திரஜத்தையும் மகாபாரத அபிமன்யூவைப் போலவும் அவரது நிலை உள்ளது. அபிமன்யூவுக்கு ஏற்பட்டது என்னஎன்பதை அபிமன்யூ படத்தின் பழைய வசனகர்த்தாவான கருணாநிதியைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
துரியோதனன் (கருணாநிதி) அமைத்த சக்கர வியூகத்தில் நுழைந்த அபிமன்யூவுக்கு வெளியில் வரத் தெரியவில்லை. பீமன்வெளியில் வந்துவிடு என்று சொன்னது போல வைகோவை நான் அழைக்கிறேன். வெளியில் வந்துவிடுவது தான் அவருக்குநல்லது.
வைகோவை முதல்வராக்கும் கருணாநிதியின் சதித் திட்டம் வெளியில் வந்துவிட்டது. இதனால் வைகோ அங்கு இருப்பதுநல்லதல்ல என்றார்.












Click it and Unblock the Notifications