உ.பியில் தமிழக போலீஸ் எண்கெளன்டர்: 2 பயங்கர கொள்ளையர்கள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 2 முக்கியக் கொலை மற்றும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய 2 முக்கியக் குற்றவாளிகளை தமிழக போலீஸ் தனிப்படையினர், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இன்று அதிகாலை சுட்டுக் கொன்றனர்.

சேலம் நகரைச் சேர்ந்த பிரபல காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜன், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் ஆகிய இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது வீடுகளிலிருந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில கொள்ளையர்கள்தான் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஐஜி ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

வட மாநிலங்களில் போய் தனிப்படை போலீஸார் தீவிரமாக துப்பு துலக்கி 13 கொள்ளையர்களைக் கைது செய்தனர்.

இந்தக் கொள்ளைக் கும்பலின் தலைவனான சத்யவீர் என்ற புரா மற்றும் சிலரைத் தேடி வந்தனர். இந் நிலையில், புராவும், அவனது 3 கூட்டாளிகளும் உ.பி. மாநிலம் மீரட் அருகே உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து தமிழக தனிப்படை போலீஸார் அங்கு விரைந்தனர். அவர்களுடன் உ.பி. மாநில அதிரடிப்படை போலீஸாரும் சென்றனர்.

சம்பந்தப்பட்ட வீட்டை அவர்கள் சோதனையிட்டபோது அவர்கள் அங்கு இல்லை. இதையடுத்து அந்தக் கும்பல் பர்டாபூர் கிராமப் பகுதியை ஒட்டி காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதை அறிந்து அங்கு தேடுதல் வேட்டையை நடத்தியபோது புராவும் அவனது கூட்டாளிகளும் போலீஸாரை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர்.

இதையடுத்து போலீஸார் திருப்பிச் சுட்டனர். இதில் புராவும், இன்னொருவனும் குண்டு பாய்ந்து இறந்தனர். மற்றவர்கள் தப்பி விட்டனர்.

இந்தக் கும்பலிடம் இருந்து பல துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சுட்டுக் கொல்லப்பட்ட புரா மிகப் பெரும் கொள்ளையன் ஆவான். நாடு முழுவதும் இவன் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக உ.பி. மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வட மாநிலங்களில் இருந்து லாரிகளில் வந்து ஹை-வேஸ்களின் அருகே உள்ள பெரிய வீடுகளில் கொள்ளையடித்துவிட்டு தப்பிவிடுவது இக் கும்பலின் வழக்கம்.

இவர்கள் யார் என்ற விவரமே தெரியாத நிலையில் வழக்குகளை மிக அழகாக துப்பு துலக்கினார் சட்டம் ஒழுங்குப் பிரிவு ஐஜியான ஜாங்கிட். இவரது தலைமையிலான டீம் டெல்லி, உபியில் அயர்ன்காரர்களாக, சாயா விற்பவர்களாக, லாரி டிரைவர்- கிளீனர்களாக பல மாதங்களைச் செலவிட்டுத் தான் குற்றவாளிகளை அடையாளம் கண்டது.

மீரட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஜாங்கிட், கொல்லப்பட்ட புரா ஹரியாணாவைச் சேர்ந்தவன். இவன் மீது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் பல வழக்குகள் உள்ளன. இவ் பவாரியா கும்பல் என்ற கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவன்.

லாரிகளைத் திருடி அதில் வேறு மாநிலத்துக்குப் போய் வீடுகளில் புகுந்து எல்லோரையும் அடித்துக் கொன்றுவிட்டு கொள்ளையடித்துவிட்டுத் தப்புவது இவர்களது ஸ்டைல் என்றார்.

பல மாநிலங்களில் இந்தக் கொள்ளையர்கள் கை வரிசையைக் காட்டியிருந்தாலும் இவர்களைப் பிடிக்க எந்த மாநில போலீசாரும் தேடிக் கொண்டு வந்ததில்லை.

தமிழக போலீசார் தான் தீவிரமாக விசாரித்து இக் கும்பலைச் சேர்ந்தவர்களைக் கைது செய்தது. இப்போது இக் கும்பலின் தலைவனும் போட்டுத் தள்ளப்பட்டுவிட்டான்.

தமிழக போலீசில் உள்ள மிகத் திறமையான அதிகாரியான ஜாங்கிட்டு வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவரால் உபி ஆபரேசனை எளிதாகக் கையாள முடிந்தது.

சபாஷ் ஜாங்கிட்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+