ஸ்டாலின் என்ன அவதார புருஷனா?: நாஞ்சில்
நாகர்கோவில்:
அதிமுக-மதிமுக கூட்டணிக்கு தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 100 சதவீத வெற்றி உறுதியாகி விட்டது என்று மதிமுக கொள்கை விளக்கச் செயலாளர் நிாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலக நாஞ்சில் சம்பத்தின் வாயும் ஒரு முக்கியக் காரணம். அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் சம்பத்.இதனால் திமுகவின் கடும் கோபத்துக்கு ஆளானார், அதேசமயம் வைகோவின் மன வருத்தத்தையும் சம்பாதித்தார்.
இந் நிலையில் வைகோவே, திமுகவிலிருந்து விலகும் முடிவை எடுத்தவுடன் சம்பத் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அதிமுகவுடன், மதிமுக கூட்டணி அமைத்துள்ளதை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இந்தக் கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெறும், அதாவது 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
25 வருட சிறை வாசத்தை முடித்து விட்டு நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து வெளியேவந்தபோது உங்களை சிறையில் அடைத்தவர்களை என்ன செய்வது என்று கேட்டனர். அதற்கு அவர், நாட்டை சீரமைத்தால் போதும், பழையதை பேச வேண்டாம் என்று கூறிவிட்டார்ர்
அதுபோலத்தான், அரசியலில் கடந்த கால நிகழ்வுகளை பேச நாங்கள் தயாராக இல்லை. தமிழ்நாட்டை சீரமைக்கவே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். கட்சிக்கு ரத்தம், சதையுமாக திகழும் தொண்டர்களின் உணர்வுக்கு இந்த கூட்டணி வடிவம் கொடுத்துள்ளது.
19 மாத காலம் வைகோ சிறையில் இருந்தார். சிறைவாசத்தின் கடைசி காலத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிறது. அதற்கு முன்பு 1998 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
ஆனால் 1999ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளையே ஒதுக்கினர். வைகோ சிறையில் இருந்து வருவதற்கு முன்பே தொகுதிப் பங்கீட்டை முடித்து விட்டனர்.
அவர்களிடம் இரும்புப் பெட்டி இருக்கிறது, எங்களிடம் இதயம் இருக்கிறது. கூட்டணி வைத்ததில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இல்லை. திமுக கூட்டணியில் நாங்கள் அனுசரித்துத்தான் போனோம், ஆனால் அவர்கள் அனுசரணையாக நடந்து கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் பாமக 3வது பெரிய கட்சியா? அந்தக் கட்சி நாகர்கோவிலில் இருக்கிறதா? நெல்லையில் இருக்கிறதா? ராமநாதபுரத்தில் இருக்கிறதா? ஈரோட்டில் இருக்கிறதா? மதுரையில் இருக்கிறதா இருக்கிறது?
வட தமிழகத்தில் மட்டும் இருக்கும் ஒரு கட்சியை தமிழகத்தின் 3வது பெரிய கட்சி என்று சொன்னால் எப்படி ஏற்க முடியும்?
தமிழ்நாட்டில் மக்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்திருக்கிறது.
எம்.ஜி.ஆர் தொண்டர்களும், மதிமுக தொண்டர்களும் கை கோர்த்து விட்டனர். இது காலத்தின் கட்டாயம். இது இயற்கையான வெற்றிக் கூட்டணி. இரு கட்சிகளின் பொதுச் செயலாளர்களும் இன்று மேற்கொண்ட முடிவு வரலாற்றின் கல்வெட்டுச் செய்தி.
குடும்ப ஆட்சிக்கு அனுமதிக்கக் கூடாது. ஸ்டாலின் என்ன அவதார புருஷனா? அவரை ஏன் முன்னிலைப்படுத்துகிறார்கள்? திமுகவில் வேறு ஆள் இல்லையா? வேறு யாரும் திமகவுக்காக தியாகம் செய்யவில்லையா?.
மதிமுக ஒரு கல்கோட்டை. இதிலிருந்து ஒரு கல்லைக் கூட அவர்களால் பெயர்த்தெடுக்க முடியாது. கடந்த காலத்தை மறப்போம், அதைப் பேசினால் மறுப்பும் கொடுப்போம். அதைப் பற்றி பேச தயாராக இல்லை. இந்த கூட்டணி நூற்றுக்கு நூறு வெல்லும், வெல்லும், வெல்லும் என்றார் சம்பத்.












Click it and Unblock the Notifications