கச்சதீவு திருவிழா-தடுக்கப்பட்ட தமிழக மீனவர்கள்
ராமேஸ்வரம்:
இந்திய, இலங்கை கடல் எல்லையில் உள்ள கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதை மீறிச் செல்ல முயன்ற மீனவர்கள் மீது ராமேஸ்வரம் துறைமுகத்தில் போலீஸார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.1974ம் ஆண்டு வரை இந்தியாவின் ஒரு பகுதியாக விளங்கியது கச்சத்தீவு. இந்தத் தீவில் புனித அந்தோணியார் பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்திற்கு ஒரு வரலாறு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பு கடும் புயல் வீசியபோது, தொண்டி அருகே உள்ள நம்புதாளை பகுதியைச் சேர்ந்த சீனிக்குப்பன் என்ற மீனவர், புயலில் அடித்துச் செல்லப்பட்டு கச்சத்தீவில் கரை ஒதுங்கினார்.
தன்னைக் காப்பாற்றியது தான் வணங்கும் புனித அந்தோணியார்தான் என்று நம்பிய அவர், ஆளரவமற்ற கச்சத்தீவில் குடிசையால் ஆன சிறிய பேராலயத்தை நிர்மாணித்தார். அதுதான் புனித அந்தோணியார் பேராலயமாக இன்று வளர்ந்துள்ளது.
1974ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. இதனால் கச்சத்தீவு இலங்கை வசமானது.
இருப்பினும் புனித அந்தோணியார் திருவிழாவில் இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளலாம் என கச்சத்தீவு ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்து சேர்க்கப்பட்டதால், ஆண்டுதோறும் இரு நாட்டு மீனவர்களும் இந்த திருவிழாவில் பங்கேற்று வருகின்றனர்.
இலங்கையில் பதட்டமான நிலை நிலவுவதாலும், அகதிகள் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதாலும், பாதுகாப்பு கருதி திருவிழாவுக்கு கச்சத்தீவு செல்ல அனுமதிக்க முடியாது என்று போலீஸார் தடை விதித்தனர்.
இதனால் தமிழக மீனவர்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் தடையை மீறி தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்ல முற்பட்டனர். இதனால் ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் அவர்கள் மீது பயங்கர தடியடி நடத்திக் கலைத்தனர். இதனால் கிறிஸ்தவர்களும், பாதிரியார்களும் கோபமடைந்து போலீஸைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் நேற்று மாலை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா தொடங்கியது. இன்று மாலை திருவிழா நிறைவுபெறும்.












Click it and Unblock the Notifications