மாயாவதி கட்சியில் டாக்டர் கிருஷ்ணசாமி!
சென்னை:
தமிழகத்தில் எந்தக் கூட்டணியும் தனது கட்சிக்கு இடம் தராமல் நட்டாற்றிலி விட்டுவிட்டதால், புதிய தமிழகம் கட்சியை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைத்து விட்டு, அக்கட்சியின் தமிழகத் தலைவராக மாற டாக்டர் கிருஷ்ணசாமி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
தென் மாவட்ட தலித் மக்களிடையே ஓரளவு செல்வாக்கு பெற்றவர் டாக்டர் கிருஷ்ணசாமி. ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட முடிவு செய்திருந்தார். ஆனால் திமுக கூப்பிடவே இல்லை, அதிமுகவோ திருமாவளவனை சேர்த்துக் கொண்டுவிட்டது.
திருமா இருக்கும் இடத்தில் கிருஷ்ணசாமி இருக்க மாட்டார். இதனால் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகிவிட்ட கிருஷ்ணசாமி தற்போது புதிய முடிவை எடுத்துள்ளார்.
உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதியைத் தலைவராகக் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, அக்கட்சியின் தமிழகத் தலைவராக அவர் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக மாயாவதியுடன் பேசி முடித்து விட்டாராம் டாக்டர்.
விரைவில் புதிய தமிழகம், பகுஜன் சமாஜ் கட்சி இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகுமாம்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான பின்னர் தனித்துப் போட்டியிடுவதா அல்லது சிறு கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை அமைப்பதா என்பது குறித்து மாயாவதியுடன் கலந்து பேசி முடிவெடுக்கவுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.
தனக்காக மாயாவதி வந்து பிரச்சாரம் செய்தால் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற முடியும் என கிருஷ்ணசாமி கருதுகிறார்.












Click it and Unblock the Notifications