சட்டசபையில் ஜெ: கருணாநிதி, அமைச்சர்கள், பீட்டருடன் கடும் வாக்குவாதம்
சென்னை:
மதமாற்றத் தடை சட்டத்தை எனது அரசு அப்போதே நீக்கிவிட்டது. ஆனால், அதை இப்போது தான் நீக்குவதுபோல மீண்டும் திமுக சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இது புதைக்கப்பட்ட பிணத்தை மீண்டும் புதைப்பதுபோல் உள்ளது என்று சட்டசபையில் ஜெயலலிதா புகார் கூறினார்.
இதற்கு முதல்வர் கருணாநிதி, மரணத்தில் சந்தேகம் இருந்தால் பிணத்தை மறுபரிசோதனை செய்து புதைப்பதுவழக்கம் தானே என்று பதில் தந்தார்.இந்தச் சட்டம் தொடர்பாக ஜெயலலிதாவுக்கும், காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர்அல்போன்ஸுக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.
அடிதடியில் இறங்கி அதிமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து சட்டசபைக்கு நான்போவேன் என்று அறிவித்த ஜெயலலிதா, இன்று காலை சட்டசபைக்கு வந்தார். உள்ளே தனக்கு ஒதுக்கப்பட்டஇருக்கையில் தனியே அமர்ந்தார்.
ஓ.பி அறையில் அதிமுக எம்எல்ஏக்கள்:
கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டமன்ற வளாகத்துக்குவந்திருந்தனர். ஆனால், அவர்கள் யாரும் சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும்எதிர்க் கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தின் அறையில் அமர்ந்திருந்தனர்.
முன்னதாக இன்று காலை 9 மணிக்கு சட்டசபையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூடியது. கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட அக் கூட்டத்தில், வன்முறையில் ஈடுபட்ட அதிமுக வருத்தம் தெரிவித்துக் கடிதம் கொடுத்தால் அதுகுறித்து திங்கள்கிழமை பரிசீலிக்கப்படும் என்று சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார்.
இந் நிலையில் 9.25 மணிக்கு ஜெயலலிதா கோட்டைக்கு வந்தார். சபாநாயகர் செல்லும் நுழைவு வாயில் வழியாகஅவர் உள்ளே வந்தார். அப்போது அங்கு கூடிய அதிமுக எம்எல்ஏக்கள் புரட்சித் தலைவி வாழ்ககோஷமிட்டனர். உள்ளே போன ஜெயலலிதா, அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டுசட்டசபைக்குள் லாபி வழியாக நடந்தார்.
ஜெ-கருணாநிதி எதிரெதிரே:
அப்போது எதிர் திசையில் கருணாநிதி வந்தார். இருவரும் எதிரெதிரே வந்த நிலையில், ஒருவரை ஒருவர் நேரில்பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஜெயலிலதா தனது நடையின் வேகத்தைக் குறைக்க, கருணாநிதிசபாநாயகரின் அறைப் பக்கம் திரும்பிப் போய்விட்டார். இதனால் அங்கு ஏற்பட்ட இறுக்கம்தளர்ந்தது.
அப்போது சபாநாயகர் அறையிலிருந்து மதிமுக எம்எல்ஏ கண்ணப்பன் வெளியில் வந்தார். அவர்ஜெயலலிதாவுக்கு வணக்கம் சொல்ல, அலுவல் ஆய்வுக் குழு முடிவு என்ன என்று கேடடார் ஜெயலலிதா.தாக்கப்பட்ட உறுப்பினர்கள் புகார் கொடுத்துள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் வருத்தம் தெரிவித்து கடிதம் தந்தால்மீண்டும் சபைக்குள் அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
தனியே அமர்ந்த ஜெ:
இதையடுத்து உள்ளே சென்ற ஜெயலலிதா தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார்.
அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி அளித்தார். ஆனால், முதலில்தனக்குப் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரினார். அதை சபாநாயகர் ஏற்கவில்லை.
ஆனாலும் பிற உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருந்தபோது மீண்டும் மீண்டும் எழுந்து எனக்கு முதலில் பேசவாய்ப்புத் தர வேண்டும் என ஜெயலலிதா கேட்டுக் கொண்டே இருந்தார்.
பின்னர் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானம் மீது பேசினார். அப்போது கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்குறித்து அவர் பேசினார்.
புதைக்கப்பட்ட பிணம்:
அவரது வாதத்தின்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் எனது ஆட்சிக் காலத்திலேயே ரத்து செய்யப்பட்டு விட்டது.இப்போது அதை மீண்டும் ரத்து செய்வதாக திமுக அரசு கூறுவது, புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து மீண்டும் புதைப்பதற்குச் சமம் என்றார்.
இதையடுத்து பீட்டருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே மிகக் காரசாரமான வாக்குவாதம் நடந்தது.
சாவில் சந்தேகம்:
அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, பிரேதம் பற்றி அம்மையார் சொல்கிறார். சாவில் சந்தேகம் இருந்தால்அதையும் செய்து தான் பார்போம் என்றார்.
முன்னதாக ஜெயலலிதா பேச 30 நிமிடம் அனுமதி அளித்தார் சபாநாயகர். அப்போது பேசிய ஜெயலலிதா,அரசியலில் என்னை உருவாக்கிய எம்ஜிாரை வணங்கி எனது உரையைத் தொடங்குகிறேன். என்னை வெற்றிபெறச் செய்த ஆண்டிப்பட்டி மக்களுக்கு நன்றி. ஆளுநர் உரையில் நிறைய தவறுகள் உள்ளன. அதைப் பற்றி பேச30 நிமிடங்கள் போதாது.
நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் வீதம் 50 லட்சம் ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என ஆளுநர் உரையில்கூறப்பட்டுள்ளது. அதை எந்த அடிப்படையில் கொடுக்க முடியும். தமிழக அரசிடம் 3 லட்சம் தரிசு நிலம் தான்உள்ளது. தனியாரிடம் 46 லட்சம் தரிசு நிலம் உள்ளது. அதை எப்படி நிலமற்றவர்களுக்கு கொடுக்க முடியும்?என்றார்.
நீங்க உட்காருங்க:
அப்போது அமைச்சர் பொன்முடி பதில் சொல்ல எழுந்தார். இதையடுத்து, நீங்கள் உட்காருங்கள். நான் இன்னும்முடிக்கவில்லை என்றார் ஜெயலலிதா.
சபாநாயகர் (குறுக்கிட்டு): தவறுகளை சுட்டிக் காட்டும்போது அமைச்சர்கள் பதில் சொல்லித் தானே ஆகவேண்டும் என்றார்.
அமைச்சர் அன்பழகன்: நீங்கள் முதல்வராக இருந்தவர், அவை மரபுகள் தெரிந்தவர். உறுப்பினர் தவறாகபேசினால் அதை மறுக்க அமைச்சர்களுக்கு உரிமை உண்டு.
ஜெயலலிதா: நான் சொல்லி முடித்த பின்னர் தான் மறுக்க வேண்டும். ஏழைகளிடம் தரிசு நிலங்கள்மேம்படுத்தப்படாமல் இருக்கின்றன.
எப்படி? எப்படி? எப்படி?
முதல்வர் கருணாநிதி: சில நேரங்களில் குறுக்கிட வேண்டிய அவசியம் உள்ளது. நீங்கள் (ஜெ) எப்படிகுறுக்கிடுவீர்கள் என்பதை நானும் இந்த நாடும் அறியும். தேர்தல் அறிக்கையில் அரசின் கைவசம் உள்ள இடம்,தனியார் வசம் உள்ள நிலம் என்று நாங்கள் தனித்தனியாக குறிப்பிடவில்லை. 50 ஏக்கர் நிலத்தை மேம்படுத்திக்கொடுப்போம்.
ஜெ: எனக்கு 2 சந்தேகம். 46 லட்சம் தனியார் நிலத்தை எப்படி பகிர்ந்து கொடுப்பீர்கள்?
கருணாநிதி: இந்தத் திட்டத்தை ஜெயலலிதா தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் 59 லட்சம் ஏக்கர்தரிசு நிலம் உள்ளது. ஏழைகளிடம் உள்ள தரிசு நிலத்தை எடுத்து அதை மேம்படுத்தி அதை அந்த ஏழைகளுக்கேகொடுப்போம். இதற்காக மற்ற விவசாயிகளிடம் உள்ள நிலத்தைப் பறிக்கப் போவதில்லை என்றார்.
ஜெ: உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நடத்திய கணக்கெடுப்பின்படி 86 லட்சம் ஏழைகள் இருக்கிறார்கள்.நீங்கள் அறிவித்தபடி தலா 2 ஏக்கர் நிலம் எப்படி தர முடியும். 86 லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டுமென்றால்1.72 கோடி ஏக்கர் நிலம் வேண்டுமே? அதை எங்கிருந்து கொடுப்பீர்கள்?
அன்பழகன்: விவசாயிகள் அனைவருக்குமா கொடுக்கிறோம். நிலமற்ற விவசாயிகளுக்கு மட்டும் தானே.உங்களுக்கு கருத்து விளக்கம் இல்லை. இதனால் இப்படி கேட்கிறீர்கள்
அமைச்சர் பொன்முடி: வாக்குறுதிப்படி 50 ஏக்கர் நிலம் பண்படுத்தித் தரப்படும். எதையும் தெள்ளத் தெரிந்துஆராய்ந்து சொல்வர் முதல்வர் தான் கலைஞர்.
நீங்கள் செய்தீர்களா?:
ஜெ: வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. திமுகவின் இன்னொரு வாக்குறுதியான கூட்டுறவுக் கடனைதள்ளுபடி செய்யும் விஷயத்தில், நாணயமாக கடனை திருப்பிச் செலுத்தியவர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுப்பீர்களா? மற்ற வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வீர்களா?
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்: நீங்கள் எல்லா கடனுக்குமா வட்டியை தள்ளுபடி செய்தீர்கள்? கூட்டுறவு வங்கியில்விவசாயிகள் வாங்கிய கடனுக்கான வட்டியை மட்டும் தானே ரத்து செய்தீர்கள்.
(இதற்கு ஜெவிடம் பதில் இல்லை)
அன்பழகன்: கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் மட்டும் தான் ரத்து செய்யப்படும் என்று சொன்னோம். அதைசெய்து காட்டிவிட்டோம். மாமன்-மச்சானிடம் வாங்கிய கடனை எல்லாம் ரத்து செய்ய முடியாது.
ஜெ: மற்ற வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.
அமைச்சர் வீராசாமி: உங்கள் ஆட்சியில் அவர்கள் பிற வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி தள்ளுபடிசெய்யப்பட்டிருந்தால் கடனும் ரத்து செய்யப்படும்.
அல்போன்சுடன் வாக்குவாதம்:
ஜெ: கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கும் திட்டம் மாநில அரசினுடையது. இதற்கு மத்திய அமைச்சர் உத்தரவாதம்தரவில்லை.
(இதற்கு காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பதில் சொல்ல முயலவே, அவரை நோக்கி மிகக் கிண்டலாகஜெயலலிதா கருத்துத் தெரிவித்தார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது. ஜெயலலிதா பேசியதைநீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார்)
பேசவே விடலை- பாமக எம்எல்ஏ:
முன்னதாக பாமக எம்எல்ஏ வேல்முருகன் பேசுகையில், கடந்த ஆட்சியில் கல்விக் கொள்கை சரியில்லை.நுழைவுத் தேர்வில் பல குழப்பங்கள். புதிய பாடத் திட்டத்தை அறிமுகம் செய்துவிட்டு அதற்கேற்பஆசிரியர்களுக்கு பயிற்சி தரவில்லை. இந்தக் குழப்பங்களால் தான் பிளட் டூவில் 1 லட்சம் பேர்தோல்வியடைந்துள்ளனர். என் தொகுதியில் ஒரு கலைக் கல்லூரி கூட இல்லை. இதைச் சொல்லக் கூட அதிமுகஆட்சியில் எனக்கு அனுமதி தரப்படவில்லை என்றார்.
நேரம் ஒதுக்குவீர்களா?
அப்போது எழுந்த ஜெயலலிதா, என்னைப் பற்றியும் என் ஆட்சி பற்றியும் வேலு முருகன் தவறான தகவல்களைதந்துள்ளார். அதற்கு நான் விளக்கம் தர வேண்டும். எனக்கு எப்போது நேரம் ஒதுக்குவீர்கள் என்று அறியவிரும்புகிறேன் என்றார்.
ஒதுக்கும்போது சொல்வோம்:
சபாநாயகர் ஆவுடையப்பன்: நேரம் ஒதுக்கும்போது அது பற்றி அறிவிக்கப்படும்.
ஜெ: எனக்கு ஒன்றரை மணி நேரம் பேச அனுமதி வேண்டும். எப்போது தருவீர்கள்?
சபாநாயகர்: வாய்ப்பு வரும்போது சொல்கிறேன்.
வரும்போது வரும்:
ஜெ: எப்போது வாய்ப்பு வரும்.
சபாநாயகர்: வாய்ப்பு வரும்போது சொல்கிறேன்
இவ்வாறாக விவாதம் நடந்தது.
பலத்த பாதுகாப்பில் கோட்டை: அதிமுக, காங்கிரஸ் மோதல், தொடர்ந்து அதிமுகவினர் சஸ்பெண்ட், ஜெயலலிதாவின் வருகைஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தலைமைச் செயலக வளாகத்தில் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
எம்எல்ஏக்கள் தவிர பிற அதிமுகவினர் யாரும் கோட்டைக்குள் நுழைந்து விடாமல் தடுக்க மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.தலைமைச் செயலகத்திற்குள் நுழையக் கூடிய அனைத்து வாசல்களிலும் போலீஸார் தீவிர சோதனை நடத்திய பின்னரே யாரையும் உள்ளே அனுமதித்தனர்.
உரிய அடையாள அட்டைகள் இல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள், தலைமைச் செயலகஊழியர்கள் என அனைவரிடமும் அடையாள அட்டையைப் பரிசோதித்த பின்னரே உள்ளே விட்டனர்.
அனைத்து நுழை வாயில்களிலும் துப்பாக்கிய ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications