ஈழப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்: விடுதலைப் புலிகள்

Subscribe to Oneindia Tamil

கிளிநொச்சி:

ஈழத்தில் நடந்து வரும் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும், ஆதரவு தர வேண்டும். இலங்கையின் அடக்குமுறைத் தாக்குதலை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

இலங்கையில் நிலவும் போர்ச் சூழலை தணிக்கும் வகையில், விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சு நடத்த இலங்கைக்கான நார்வே தூதர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் கிளிநொச்சிக்கு விரைந்தார். அங்கு விடுதலைப் புலிகளின் தலைமையகத்தில் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனை சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்ச் செல்வன்,

Tamilchelvan
நார்வே குழுவினருடன் வழக்கமாக சந்திக்கின்ற சந்திப்பாகவே இது இருந்தது.

முக்கியமாக ஓஸ்லோ சந்திப்புகளுக்கு பின்னரான சந்திப்பு என்ற வகையிலும், அரசும், அரசுப் படைகளும் படுகொலைகளையும், வன்முறைகளையும் அதிகரித்துள்ள நிலையில், நார்வே குழுவினர்களைச் சந்தித்தது என்ற வகையில், இந்த சந்திப்பு முக்கியம் பெறுகின்றது.

நார்வே அனுசரணையாளர்களுக்கு எங்கள் நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவாகவும், உறுதியாகவும் தெரிவித்துள்ளோம். இலங்கை அரசாங்கம் தொடர்ந்த தமிழ் மக்களை படுகொலை செய்து கொண்டிருப்பதும் எமது பிரதேசம் மீதும், எமது மக்கள் மீதும் இலங்கை விமானப்படை குண்டு வீச்சுக்களையும்,

ஆர்ட்டில்லரி தாக்குதல்களையும், பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தி தமிழ் மக்களை படுகொலை செய்வதும் எமது மக்கள் காணாமல் போவதும், மக்கள் அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் போன்ற நடவடிக்கைகள் ஒரு பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பதையே சுட்டிக் காட்டுகிறது என்பதையும்,

நாங்கள் அரசின் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு பொறுமை காத்துக் கொண்டிருக்க முடியாது என்பதையும் உறுதியாகத் தெரிவித்துள்ளோம்.

இதுகுறித்து நார்வே தரப்பு இன்று அல்லது நாளை அரசுத் தரப்பை சந்தித்து எங்களுடைய நிலைப்பாட்டைத் தெரியப்படுத்துவதாக கூறியுள்ளனர்.

நார்வே தரப்பு எங்களிடம் ஐந்து கேள்விகளைக் கேட்டுள்ளது. இதற்கு உரிய பதிலை அனுப்பியுள்ளோம். அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம் பெறுவது தொடர்பான கால அவகாசத்தை கேட்டறிந்தார்கள்.

நீண்ட கால அவகாசத்தைக் கொடுப்பதில் உள்ள சங்கடமான நிலைகள் பற்றியும், யுத்த நிறுத்த உடன் படிக்கையை நூறு சதவீதம் கடைப்பிடிக்கின்ற தன்மையை அரசு காட்டுகின்ற போதுதான் யுத்த நிறுத்த உடன்பாடு மேற்கொண்டு செல்ல முடியும் என்பது பற்றிய விளக்கங்களை பதிலில் தெரிவித்துள்ளோம்.

ஐரோப்பிய ஒன்றியம் தடை அறிவிப்பை வெளியிட்டது என்பது நடுநலையை, சமதரப்பு என்கிற கோட்பாட்டை, நிலைப்பாட்டை பலவீனப்படுத்தியிருக்கினறது.

யுத்த நிறுத்த உடன்பாடு கையெழுத்திடப்படுகின்ற போது எங்கள் தலைமைப் பீடம் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்திருந்தது. நார்வேத் தரப்போடு உடன்பாடு கூட காணப்பட்டது.

அதாவது, கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளுகின்ற நாடுகள் இரண்டு தரப்பையும் சமத்துவமாகவும், சமதரப்பாகவும் நடுநிலையோடும் ஏற்றுக் கொண்ட நாடுகளாக அமைய வேண்டும் என்பது ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம்.

துரதிரஷ்டவசமாக ஐரோப்பிய யூனியன் தடை அறிவிப்பை செய்தது என்பது அது யுத்த நறுத்த உடன்பாட்டின் அமுலாக்கம் அதன் செயல்பாட்டுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஏற்ற வகையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பது நாம் ஏற்கனவே கண்ட உடன்பாடு. அதன் அடிப்படையில்தான் நாம் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றோம்.

ஐரோப்பிய நாடுகளின் இந்தப் பணியைச் செய்கின்ற போது யுத்த நிறுத்த உடன்படிக்கையை அமல்படுத்துகின்ற, கண்காணிக்கின்ற கண்காணிப்பாளர்கள் நடுநிலைமை தவறிய ஒரு நிலைதான் இருக்கும். எங்கள் மக்களோ, நாங்களோ அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

யுத்த நிறுத்த உடன்பாட்டின் அமலாக்கமும், கண்காணிப்பும், பலவீனமாகப் போகும். ஒரு பக்கச் சார்பாகவும் போகும். அந்த நிலையில் நார்வே தரப்பிற்கு இதன் முக்கியத்துவங்களையும், நிலைமைகளையும் நாங்கள் வெளிப்படுத்தி விரைவாக மாற்றங்களை செய்து ஒழுங்குபடுத்த முடியுமாக இருந்தால் ஒழுங்குபடுத்த முடியும் என்று தெரிவித்திருக்கிறோம்.

இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நார்வேக்கு உள்ளது. ஏனெனில் தடை அறிவிப்பை ஐரோப்பிய ஒன்றியம் செய்து விட்டது. யுத்த நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படை உடன்பாடு பலவீனப்பட்டிருக்கின்றது. அதை நார்வே ஏற்றுக் கொள்வது தவிர்க்க முடியாதது.

விமானத் தாக்குதல், பீரங்கித் தாக்குதல்களை இலங்கைப் படைகள் தொடர்ந்து எங்கள் பகுதிகள் மீது நடத்திய வண்ணம் உள்ளது. இவை அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல்கள். இது ஒரு யுத்த பிரகடனமே என்று உணர்கின்றோம் என்பதையும்,

நார்வேத் தரப்பிற்கு சுட்டிக் காட்டி, தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெறுமாக இருந்தால் எம் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாகக் கருதி நாம் பதில் தாக்குதலை நடத்த வேண்டி வரும் என்பதையும் நார்வே குழுவினருக்குத் தெரிவித்துள்ளோம்.

இலங்கை அரசாங்கம் காடைத்தனமான, வெறித்தனமான இனப் படுகொலையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்ற நிலையில் தமிழர் தாயகத்தில் எங்கள் மக்கள் படுகொலை செய்யப்படுகின்றபோது, தமிழகத்தில் வாழ்கின்ற எமது மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கும், கொந்தளிப்பான நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

எங்களுடைய மக்கள் ஒன்றுபட்டு இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு எதிராக தமது உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், இந்திய அரசும், தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து இலங்கை அரசாங்கத்தின் இனப் படுகொலைகளுக்கும், யுத்த முன்னெடுப்புகளுக்கும் தமது கண்டனத்தை தெரிவிக்க வேண்டியது இந்திய அரசினுடைய

இந்திய அரசு இலங்கை அரசின் அடாவடித்தனங்களைக் கண்டித்து, தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்தை ஏற்றுக் கொண்டு அங்கீகரித்து, தார்மீக ஆதரவை இந்திய அரசும் வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் தமிழ் மக்களுடைய விருப்பம். அதுதான் தமிழீழ விடுதலைப புலிகளின் நிலைப்பாடும்.

சிங்களத் தலைவர்கள் எப்போதாவது இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்கள் என்றால் தமிழர்களுடைய அரசியல் ராணுவ முன்னெடுப்புகள், போராட்ட முன்னெடுப்புகளை குழப்புவதுதான் நோக்கமாக இருக்கும். அந்த வகையில்தான் மங்கள சமரவீரா தற்போது இந்தியாவுக்கு மேற்கொள்ளும் பயணமும்.

இது வழக்கமானது. வெளியுறவு அமைச்சர் சமரவீரா, பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்றால் வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்ளச் செல்கின்றார் என்றே நாம் பார்க்கலாம.

சர்வதேச சமுதாயத்தை தவறாக திசை திருப்பிக கொண்டு செல்வதறகு அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள படுகொலைகளை மறைத்து தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்தை பலவீனப்படுத்தவும், இப்பயணங்களை சிங்களத் தலைவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் தமிழர் தரப்பால் எண்ணப்படுகின்றது.

சர்வதேச உறவுகள், தொடர்புகளை நாம் துண்டிக்க முடியாது. அனுசரணையாளர்கள் என்ற வகையில் எங்களுடன் பேசுவார்கள், கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள். நார்வே குழுவினருடனான சந்திப்பு வழமையான நடவடிக்கைதான். இந்த நடவடிக்கை தொடரும். இதில் முன்னேற்றம், முன்னேற்றமின்மை என்பது தரப்புகளைப் பொறுத்தது.

இலங்கை அரசு இதை மதிக்காமல், ஏற்றுக் கொள்ளாமல் யுத்த நிறுத்த உடன்பாட்டையோ, அமைதி முயற்சியையோ, சீர்குலைத்து படுகொலைகளையும், ஒரு குழப்பகரமான சூழநிலையும் உருவாக்க வேண்டும். ஒரு யுத்தத்தை நகழ்த்த வேண்டும் என்ற நிலையில் செயல்படும்போது, இந்த சந்திப்புகள் எந்தப் பலன்களையும் தராது. இலங்கை அரசின் போக்கிலேயே எல்லாம் உள்ளன என்றார் தமிழ்ச் செல்வன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+