மழை சேதம்: ஆட்சியர்களுக்கு கருணாநிதி உத்தரவு
சென்னை:தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள சேதம் தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரித்து உடனடியாக அனுப்புமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை மீண்டும் வலுத்துள்ளது. கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் விடிய விடிய தமிழகத்தின் பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது. தொடர் மழை காரணமாக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான அணைக்கட்டுக்கள் ஏற்கனவே நிரம்பியுள்ளன.
நிரம்பிய அணைக் கட்டுகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி, வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தின் முக்கிய ஏரியான வெலிங்டன் ஏரி நிரம்பி உபரி நீர் சாலைகளில ஓட ஆரம்பித்துள்ளது. இதனால் கும்பகோணம்-விருத்தாச்சலம் இடையிலான நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இந்த ஏரியின் மொத்த உயரம் 30 அடியாகும். ஆனால் கரை பலவீனமாக இருப்பதால் 24.5 அடிக்கு மேல் நீர் தேக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.
இதைத் தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் 24.5 அடியைத் தாண்டியவுடன் உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் வெள்ளாற்றில் போய்க் கலக்கிறது. இந்த ஏரி எப்போதாவதுதான் நிரம்பும். தற்போது ஏரி நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏரி நிரம்பி தண்ணீர் சாலையில் ஓடி வருவதால் கும்பகோணம் செல்லும் வாகனங்கள் சேத்தியாதோப்பு, அணைக்கரை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதேபோல மணி முத்தா நதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டோடுவதால், விருத்தாச்சலம் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
மற்றொரு முக்கிய ஏரியான வீராணம் ஏரியும் நிரம்பியுள்ளது. இதன் மொத்த உயரம் 47.5 அடியாகும். கரையின் ஸ்திரத்தன்மையைக் கொண்டு தற்போது 43.5 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மாநிலம் முழுவதும் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேத பாதிப்புகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து தகவல்களை உடனுக்குடன் தனக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மழை, வெள்ளம், இடி தாக்கி இறந்தவர்கள், வீடுகளை இழந்தவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சர்கள், ஆட்சித் தலைவர்கள் மூலம் நிவாரண உதவிகளையும் உடனுக்குடன் வழங்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
வெள்ளம் பாதித்த பகுதிகள், தாழ்வான பகுதிகள், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பை மேற்கொள்ளுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
வட கிழக்குப் பருவ மழைக்கு இதுவரை 2252 வீடுகள் சேதமடைந்துள்ளன. 59 பேர் பலியாகியுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications