திமுக கொடியுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு!!
சென்னை:திமுக கொடியுடன் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த திமுக பகுதிச் செயலாளரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு திமுக கொடியைப் பிடித்துக் கொண்டு ஒரு நநிபர் வந்தார். நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அந்த நபரைத் தடுத்து நிறுத்தினர்.
ஆனால் அவர்களை பொருட்படுத்தாமல் அந்த நபர் வேகமாக உள்ளே நுழைந்தார். திமுக கொடியுடன் ஒருவர் ஆணையர் அலுவலகத்திற்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த காவலர்கள், அந்த நபரைப் பிடித்து, உளவுப் பிரிவு உயர் அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர். அங்கு அந்த நபர் விசாரிக்கப்பட்டார்.
தனது பெயர் திண்டுக்கல் முஸ்தபா என்றும் புகார் கொடுக்க வந்ததாகவும் கூறிய அவர், நான் அமைந்தகரையில் வசித்து வருகிறேன். அண்ணாநகர் பகுதி திமுக துணைச் செயலாளராக உள்ளேன்.
எனக்கும், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ரத்தினவேலு என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. முன்னாள் நீதிபதி ஒருவரின் மகன்தான் ரத்தினவேலு. அவர் என்னிடம், ரயில்வே துறைக்குத் தேவையான கருவிகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் தொழிலை செய்யலாம் என்றார்.
இத்தொழிலில் நல்ல அனுபவம் உள்ளவர்களாக விளங்கும் சங்கர் பிரகாஷ், ரவிச்சந்திரன், சாரதி ஆகியோரையும் சேர்த்துக் கொண்டு இதை செய்யலாம் என்றார்.
அவர்களை என்னிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து நானும் அவர்களும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். வெளிநாடுகளுக்கு பிசினஸ் விஷயமாக போய் வர ரூ. 5 லட்சம் தர வேண்டும் என்று அவர்கள் கேட்டனர்.
நானும் பணத்தைக் கொடுத்தேன். ஆனால் அதன் பின்னர் அவர்கள் ரயில்வேக்கான கருவிகளையும் கொண்டு வரவில்லை, பணத்தைக் கேட்டதற்கு திருப்பித் தரவும் மறுத்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து கேட்பதற்காகத்தான் இங்கு வந்தேன் என்று கூறினார் முஸ்தபா. இதையடுத்து இந்த புகார் குறித்து உரிய முறையில் விசாரிப்பதாக கூறி முஸ்தபாவை, கொடியோடு திருப்பி அனுப்பி வைத்தனர் போலீஸார்.
மயங்கி விழுந்த பெண்:
முஸ்தபா போன சிறிது நேரத்தில் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த பெண் திடீர் என மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரி. 40 வயதாகும் இவருக்கு கணவர் ரவிச்சந்திரன், 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர். நீதிமன்றத்திலும் முறைப்படி விவகாரத்தும் வாங்கி விட்டனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி ரவிச்சந்திரன், கோட்டீஸ்வரிக்கு ஜீவனாம்சம் தரவில்லை. இதனால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டதாம். ஆனால் போலீஸார் இந்த உத்தரவை அமல்படுத்தாமல் உள்ளனராம்.
இதையடுத்து கணவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தார் கோட்டீஸ்வரி. புகார் கொடுத்து விட்டு வெளியே வந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனடியாக போலீஸார் அவரை மீட்டு அருகில் உள்ள போலீஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாலையில் அவரை வீட்டில் கொண்டு போய் விட்டனர்.












Click it and Unblock the Notifications