அறிவாயுதம் ஏந்திப் போராடுங்கள்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

மதுரை:மாணவர்கள் சிந்தனைச் செல்வராகி, அஞ்சாமை எனும் உடையணிந்து, உண்மையைக் கவசமாக்கி, அறிவு எனும்ஆயுதம் ஏந்தி சாமானியர்களின் முன்னேற்றம் காண உழைத்திட வேண்டும் என முதல்வர் கருணாநிதி அழைப்புவிடுத்துள்ளார்.

Surjit Singh Barnala with Karunanidhi and Poonmudi
ஆளுநர் பர்னாலாவிடமிருந்து டாக்டர் பட்டத்தைப் பெறும் முதல்வர்கருணாநிதி. உடன் (இடமிருந்து) பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்பி.மருதமுத்து, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) எஸ். சண்முகய்யா.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 40வது பட்டமளிப்பு விழா இன்று மதுரை ராஜா முத்தையா மன்றத்தில்நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முதல்வர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய சேவையைப்பாராட்டி அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான எஸ்.எஸ்.பர்னாலா முதல்வர் கருணாநிதிக்கு கெளரவ டாக்டர்பட்டத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மருதமுத்து, அமைச்சர்கள்உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் முதல்வர் கருணாநிதி சிறப்புரை ஆற்றினார். அவரது உரையின்சாராம்சம்:

இந்தப் பட்டத்தை ஆளுநர் தமிழிலே கையெழுத்திட்டு வழங்கியது ஒரு தனிச் சிறப்பு. தமிழால் அனைத்தும்நடக்க வேண்டும் என்று விரும்புகின்ற இன்றைய தமிழக அரசுக்கு நம்முடைய ஆளுநர் பர்னாலா வழங்கியுள்ளஒரு மாமருந்து இந்தக் கையெழுத்து என்று எடுத்துக் கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

அவர் தமிழில் கையெழுத்திட்டதால் மாத்திரம் தமிழராக ஆகி விடவில்லை. அவர் ஏற்கனவே நம்மோடுதமிழராகவே வாழ்ந்து கொண்டிருப்பவர், தமிழராகவே தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்திக்கொண்டிருப்பவர்.

இந்த விழா நாற்பதாவது பட்டமளிப்பு விழா. நாற்பது என்றதுமே எத்தனையோ உணர்வுகள், நினைவுகள் நமக்கு.நாட்டு மக்களுக்கு நான் எதையும் சொல்லவில்லை. இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்று இலக்கியம்படித்திருக்கிறோமே அதைத்தான் குறிப்பிடுகின்றேன்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எனக்கு வழங்கும் இலக்கியத்திற்கான டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுபட்டமளிப்புச் சிறப்புரை நிகழ்த்தும் அரிய வாய்ப்பு கிட்டியுள்ளமைக்கு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

பெருந்தலைவர் காமராஜர் தமிழ்க்குலம் விழிப்புற்றுத் திகழவும், இளைய சமுதாயத்தினர் கல்விக் கண் திறந்திடதெருவெங்கும் பள்ளிகள் தொடங்கி புரிந்த சாதனைகளைப் போற்றி, அவர் வாழும் காலத்திலேயே சென்னைமாநகராட்சியின் மூலம் சென்னை மாநகரில் அவருக்குச் சிலை அமைத்தோம்.

சென்னை கிண்டியில் அவருக்கு நினைவகம் அமைத்தோம். சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டுமுனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டினோம். குமரி முனையில் மணி மண்டபம் அமைத்தோம். அவர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துக் கொண்டாடியதுடன் அந்நாளை என்றும் கொண்டாடும் வகையில்தனிச் சட்டம் வகுத்து நிறைவேற்றியுள்ளோம்.

புலவர் பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அறிவு கொளுத்திய திருநகர் இம்மாமதுரை.நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரரைப் போல தேரா மன்னா, என் கணவன் கள்வன் அல்லன், ஆராயமல் என் கணவனைக் கள்வன் எனக் கூறிக் கொன்ற நீயே கள்வன் என்று நீதி கூறி, நீதி தவறியநெடுஞ்செழியப் பாண்டியனை சிந்தை கலங்கச் செய்து, நீதியை நிலைக் கண்ணாடியாய் நிறுத்திக் காட்டிய சோழர்குல மடந்தை கண்ணகி வழக்காடி வென்ற மாநகர் இந்த மதுரை மாநகர்.

இத்தகைய பெருமைகளை எல்லாம் குவித்துள்ள மாமதுரை மண்ணில் அமைந்துள்ள மதுரை காமராஜர்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளை எல்லாம் நெஞ்சினிக்க,நாவினிக்க வாழ்த்துகிறேன்.

பல்கலைக்கழகப் பட்டம் பெற்றுள்ள நீவிர், சிந்தனைச் செல்வராகி, அஞ்சாமை எனும் உடையணிந்து,உண்மையைக் கவசமாக்கி, அறிவு எனும் ஆயுதம் ஏந்தி சாமானியர்களின் முன்னேற்றம் காண உழைத்திடவேண்டுகிறேன்.

தந்தை பெரியார் காண விரும்பிய சமத்துவச் சமுதாயம் மலர்ந்து வரும் காலம் இது எனபதை இவ்வேளையில்குறிப்பிட விரும்புகிறேன். அதே வேளையில் நீதிக் கட்சி காலத்தில் அரும்பி, இன்று மலர்ந்து மணம் பரப்பி வரும்சமூக நீதிக் கொள்கைக்கு குழிதோண்டிட, கழுகுக் கூட்டம் காலம் நோக்கிக் காத்திருக்கும் கொடுமைகளையும்சுட்டிக் காட்டி, இளைஞர் கூட்டம் விழிப்புடன் இருந்தாலன்றி எதிர்கால தலைமுறைகளுக்கு நாம் கேடிழைத்தவர்ஆவோம் என்பதையும் நினைவுபடுத்திட விரும்புகிறேன்.

பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவ கால வகையினானே என நன்னூல் இலக்கணம் நவில்வது போல,இன்று பழைய கொள்கைகளும், கோட்பாடுகளும், தங்கள் செல்வாக்கை இழந்து விட்டன. ஆனால் அவற்றின்இடத்தில் புதிய குறிக்கோள்களும், லட்சியங்களும் இன்னும் நிலை நிறுத்தப்படவில்லை.

இன்று சமூகத்தில் நமக்கு ஏற்பட்டுள்ள பல சோதனைகளையும், சாதனைகளாக மாற்றும் அறைகூவலை ஏற்று,முடை நாற்றம் வீசும் மூடப் பழக்கங்களை அறவே அகற்றி காலத்தோடு ஒட்டிய நெறிமுறைகளை வாழ்க்கைப்பண்புகளை வகுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.

வாலிபம் ஒரு வசந்தம், மிக வசீகரமானதும் கூட. ஆனால் அதில் உள்ள ஒரு குறை என்னவென்றால் ஒவ்வொருநாளும், ஒவ்வொரு மணித்துளியும், ஒவ்வொரு நொடியும், வாலிபத்தை வயோதிகம் வாகை சூடிக் கொண்டேஇருக்கிறது. இளம் சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் எனில், அது உடலை விடுத்து உள்ளத்தே அடைக்கலம்புகுந்திட வேண்டும்.

வயதில் அறிவில் முதியோராய், வாய்மைப் போருக்கு என்றும் இளையராய், நீவிர் அனைவரும் உங்கள்சிந்தனையோட்டத்தின் திசையினைத் திருப்பிட வேண்டும்.

எட்மண்ட் பர்க் என்னும் ஆங்கில அறிஞர், இன்றைய இளைஞர்களின் மனங்களில் நிரம்பியுள்ள உணர்வுகள்என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள். அடுத்த தலைமுறையின் குணாம்சம் எப்படி இருக்கும் என்று நான்எடுத்துரைக்கிறேன் என்று சொன்னதற்கேற்ப, அடுத்த தலைமுறையை உருவாக்கிடும் இன்றைய இளைஞர்கள்நல்ல பண்புகளுக்கு நானிலம் போற்றிடும் எடுத்துக் காட்டுகளாய் இருந்திடல் வேண்டும்.

உங்கள் கல்விப் பயன் உலகுக்குச் சொந்தமாகட்டும், அதனால் சமுதாய வாழ்வு வசந்தமாகட்டும். ஆழ்ந்தஅறிவும், விடா முயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால் அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின்பெருமை உயரும் என அய்யன் திருவள்ளுவர் பாடிய திருக்குறளையும், அதன் அரும்பொருளையும்நினைவுபடுத்தி தமிழகம், தமிழ் மக்கள், தமிழ் மொழி, ஆகியவற்றின் பெருமைகள் உயர அயராது பாடுபடவேண்டும் என்றார் கருணாநிதி.

கேரள முதல்வருக்கு கருணாநிதி கண்டனம்:

முன்னதாக கேரள முதல்வர் அச்சுதானந்தனின் பெயரில் உள்ள இணையதளத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தவறான பல தகவல்கள் இடம்பெற்றுள்ளதற்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை விமானம் மூலம் மதுரைக்குச் வந்து முதல்வர் கருணாநிதி. விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணைவிவகாரம் தொடர்பாக வருகிற 18ம் தேதி அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை.

கேரள முதல்வர் பெயரிலான இணைய தளத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து பல்வேறு தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது கடும்கண்டனத்துக்குரியது.

கோவை, திருச்சியைத் தொடர்ந்து மதுரையிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

பெரியார் சிலையாக இருந்தாலும் சரி, கடவுள் படமாக இருந்தாலும் சரி அவற்றை அவமதித்தவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுகைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தில் தற்போது பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் சிலை வைக்க, வெங்கடேச தீக்ஷிதர் நகராட்சித் தலைவராக இருந்தபோதுதான்அனுமதி வழங்கப்பட்டது. திமுக அரசில் அனுமதி தரப்படவில்லை.

நீதிமன்றமே முன்வந்து தமிழை வழக்கு மொழியாக அறிவிக்கும் வகையில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வருவோம் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+