முலாயம் அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு வாபஸ்
லக்ளென:உ.பியில் முதல்வர் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
முலாயம் தலைமையிலான சமாஜ்வாடிக் கட்சி கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இந்த ஆட்சிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அஜீத் சிங் தலைமையிலான ராஷ்ரீய லோக் தளம் கட்சி ஆதரவு அளித்து வந்தது.
அதேபோல காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு பெறாமல் வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்தது.
சமீபத்தில் முலாயம் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அஜீத் சிங் வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து அக்கட்சியைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால் முலாயம் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் தனது அரசு தொடர்ந்து பெரும்பான்மை பலத்துடன் இருப்பதாக கூறிய முலாயம் சிங் இன்று சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பேன் என்று அறிவித்திருந்தார்.
இந் நிலையில், நொய்டா சிறார் கொலைகள் உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை நேற்றிரவு திடீரென வாபஸ் பெற்றது. இதனால் முலாயம் அரசுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
ஆதரவு வாபஸ் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில்,
உ.பியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. மாநில அரசைக் கலைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த காங்கிரஸ் கோரி வருகிறது. இன்று முலாயம் அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவுள்ளது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கூட்டத்திற்கு முன்பு எம்.எல்.ஏக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றார்.
உ.பியில் மொத்தம் 403 எம்.எல்.ஏக்கள் உள்ளன. இதில் முலாயம் கட்சிக்கு 152 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ராஷ்ட்ரீய லோக்தளத்திற்கு 15 பேர் உள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில் பாஜகவுக்கு 83 பேர் உள்ளனர். இவர்களில் 5 பேர் முலாயமுக்கு ஆதரவாக உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றாலும் கூட இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் முலாயம் அரசு வெற்றி பெறும் என்று உ.பி. அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
உ.பியில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications