சண்டையை நிறுத்த இலங்கைக்கு யுஎஸ் வலியுறுத்தல்
கொழும்பு:விடுதலைப் புலிகளுடன் சண்டை போடுவதை நிறுத்தி விட்டு அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுக்களை தொடங்குமாறு இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த நாடுகளின் 2 நாள் மாநாடு இலங்கையில் நடந்தது. இதை அதிபர் ராஜபக்ஷே தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இலங்கை அரசின் 10 ஆண்டு வளர்ச்சித் திட்டம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் பேசுகையில், இனப் பிரச்சினைக்கு இலங்கை அரசு நிரந்தரத் தீர்வு காண முயல வேண்டும். மாறாக, போரில் தீவிரமாக இறங்கினால் அமெரிக்கா உள்ளிட்ட உதவி செய்யம் நாடுகளின் நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பாக அமைந்து விடும்.
இனப் பிரச்சினைக்கு ஆயுதத் தீர்வு உகந்ததல்ல என்ற கருத்தை மீண்டும் நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். அதிபர் ராஜபக்ஷேவின் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். அதிகாரப் பகிர்வு திட்டம் குறித்த அவரது யோசனையை வரவேற்கிறோம்.
அதே சமயம் புலிகளுடன் ஆக்கபபூர்வமான பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். நீண்டு கொண்டிருக்கும் இனப் பிரச்சினையால் இலங்கையின் பொருளாதாரமும், மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு இலங்கை அரசாலும், ராணுவத்தாலும் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன. அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அமெரிக்க உதவிக் குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும் என்றார் பிளேக்.
இம் மாநாட்டில் இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மன்மோகனுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு:
இந் நிலையில் டெல்லி வந்துள்ள இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். தமிழர் பிரச்சினைக்கு இன்னும் ஒரு மாதத்தில் புதிய செயல் திட்டம் வகுக்கப்படவுள்ளதாக அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெ>வித்தார்.
காந்தியடிகள் தொடங்கிய சத்தியாகிரகப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி டெல்லியில் நேற்று 2 நாள் மாநாடு தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விக்கிரமநாயகே டெல்லி வந்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பிற்பகலில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசினார். சுமார் கால் மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு, சந்திப்பின்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. இருப்பினும் ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் இரு பிரதமர்களும் பேசியிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
பின்னர் விக்கிரமநாயகே செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு தரப்பு நல்லுறவு, நட்புறவு குறித்து விவாதித்தோம். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் அதிபர் ராஜபக்ஷே பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இன்னும் ஒரு மாதத்தில் புதிய செயல் திட்டம் வகுக்கப்படும். இவை குறித்து நார்வே தூதுக்குழுவிடம் தெ>வித்துள்ளோம். அதன் அடிப்படையில், விடுதலைப் புலிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
அதே போல ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கேவும் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். ராஜபக்ஷேவின் கட்சிக்கு ரணில் கட்சியின் 18 எம்.பிக்கள் தாவியுள்ள பரபரப்பான சூழ்நிலையில் ரணில் இந்தியாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தனது கட்சி உடைப்பு குறித்தும் அவர் பிரதமருடன் பேசியதாகத் தெரிகிறது.
இதே போல இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் ரொகிதா பொகல்லகாமாவும் இன்று டெல்லி வருகிறார்.
இலங்கை தமிழர்களுக்கு உணவு-மருந்து
இந் நிலையில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்புவதற்காக உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்கள், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறனிடம் வழங்கப்பட்டன.
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தமிழகம் முழுவதும் உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவை இலங்கையில் பசி, பட்டினியால் வாடும் தமிழர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் வழங்கப்படவுள்ளன.
இவ்வாறு சேகரிக்ப்பட்ட பொருட்களை நெடுமாறனிடம் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடந்தது. இதில் இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கமும் பங்கேற்றார்.
மந்தக்கரை திடலில் நடந்த இந் நிகழ்ச்சியில் நெடுமாறன் பேசுகையில், ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெளிவான முடிவு எடுத்துள்ளார். அதை இந்திய அரசும் பின்பற்ற வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சிவாஜி லிங்கம் பேசுகையில், அமெரிக்கா, ஜப்பான், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கை அரசுக்கு மறைமுகமாக ராணுவ உதவிகளை அளித்து வருகின்றன. எனவே இலங்கை தமிழர்களுக்கு உதவ இந்திய அரசு முன் வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications