மறு தேர்தல்: அதிமுகவுக்கு தலைமை நீதிபதிசரமாரி கேள்வி-தேர்தலை தள்ளி வைக்க மறுப்பு!
சென்னை:சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் அதிமுகதாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்றும் நீதிபதிகள் சந்தேகம் எழுப்பினர்.
திமுக கூட்டணியைச் சேர்ந்த 98 கவுன்சிலர்கள் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இதையடுத்து ஏற்கனவே அதிமுக கவுன்சிலர்கள் ராஜினாமாசெய்ததால் காலியாக உள்ள 2 இடங்களையும் சேர்த்து 100 வார்டுகளுக்கு பிப்ரவரி 18ம் தேதி மறு தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான மனு தாக்கலும் தொடங்கிவிட்டது. இந்தத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்திருந்தது. இந் நிலையில் மறு தேர்தலுக்கேதடை விதிக்கக் கோரி அதிமுக சார்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் அப்பதவியில் தொடர்ந்து செயல்பட தடை விதிக்கக் கோரி ஏற்கனவே அதிமுக தொடர்ந்த வழக்குஉயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் அவசர அவசரமாக 100 வார்டுகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. எனவே இந்ததேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். தேர்தலை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு தேர்தலை நடத்தவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அதிமுக சார்பில் வழக்கறிஞர்ஜோதி, முன்னாள் அட்வகேட் ஜெனரல் என்.ஆர்.சந்திரன் ஆகியோர் ஆஜராகினர்.
விவாதத்திற்கு இடையே தலைமை நீதிபதி ஏ.பி.ஷா குறுக்கிட்டு, 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தற்போதைய தேர்தல்ஆணையர் தேர்தலை நடத்தக் கூடாது என்று மனு செய்துள்ளீர்கள்.
தேர்தலை அறிவித்த பிறகு அதில் பங்கேற்க மாட்டோம் எனவும் கூறியுள்ளீர்கள். அப்படிச் சொன்ன பிறகு இந்த மனுவுக்கான அவசியம் என்ன?இது விசாரணைக்கு உகந்ததா என்பதே சந்தேகத்திற்குரியதாக உள்ளது.
தேர்தல் ஆணையரை நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா கண்டிக்கத்தான் செய்துள்ளாரே தவிர அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றுசொல்லவில்லை. அவர் அரசியல் சட்டப்படி பதவியில் நியமிக்கப்பட்டவர் என்றார்.
பிறகு வக்கீல் ஜோதி வாதிடுகையில், தேர்தல் ஆணையம்தான் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா கூறியுள்ளார்.எனவேதான் சந்திரசேகரன் பதவி வகிப்பதை எதிர்த்து நாங்கள் மனு தாக்கல் செய்துள்ளோம். அவர் தேர்தலை நடத்துவதால்தான் புறக்கணிக்கிறோம்என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஏ.பி.ஷா, இதை ஏன் டிவிஷன் பெஞ்ச் விசாரணையின்போது சொல்லவில்லை? தேர்தலில் பங்கேற்க மாட்டோம் என்று கூறிவிட்டு வழக்கு தொடர்ந்தால் எப்படி?
98 கவுன்சிலர்களும் ராஜினாமா செய்து விட்டார்கள். இனிமேல் தேர்தலை தள்ளிப் போட முடியாது. நடத்தித்தான் ஆக வேண்டும். மேலும்,இப்போதைய நிலையில், மறு தேர்தல் தேவை இல்லை என்று நீதிபதி முகோபாத்யாயா கூறிய தீர்ப்பு சரி என்று 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளபி.கே.மிஸ்ரா தீர்ப்பளித்தாலும் கூட தேர்தலை நடத்தித் தானே ஆக வேண்டும். காரணம் 98 கவுன்சிலர்களும் ராஜினாமா செய்து விட்டார்களே?என்றார்.
பின்னர் அரசு வழக்கறிஞரைப் பார்த்து, நீங்கள் ஏன் சுதந்திரமாக செயல்படும் ஒரு பார்வையாளரை இந்தத் தேர்தலுக்கு நியமிக்கக் கூடாது?. இதைஒரு பரிந்துரையாக நான் கூறுகிறேன், உத்தரவாகக் கூறவில்லை என்றார்.
அதற்கு அரசு வக்கீல், ஏற்கனவே ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை பார்வையாளர்களாக நியமித்துள்ளோம் என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஜோதி, அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.
பின்னர் தலைமை நீதிபதி ஷா மீண்டும், தேர்தல் நடவடிக்கை சுத்தமாக இருக்க வேண்டும். இதற்காக பார்வையாளர்களை நியமிப்பது நல்லது.இதுகுறித்து அரசிடம் கருத்துக் கேட்டுச் சொல்லுங்கள் என்றார்.
என்.ஆர்.சந்திரன் அப்போது எழுந்து, தேர்தல் நடவடிக்கையை தள்ளி வைக்க முடியும் என்று ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது என்றுசுட்டிக் காட்டினார்.
ஆனால் அதை நிராகரித்த தலைமை நீதிபதி, இந்த வழக்கைப் பொறுத்தவரை தேர்தலை தள்ளி வைக்க முடியாது. வழக்கு விசாரணை 3ம் தேதிக்குஒத்திவைக்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications