சங்கர்ராமன் கொலை: விசாரணை ஒத்திவைப்பு
புதுச்சேரி:சங்கர்ராமன் கொலை வழக்கு விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் விஜயேந்திரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்தக் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் ஜெயேந்திரர் உள்பட 15 பேர் ஆஜராகவில்லை. இதற்கானகாரணத்தை விளக்கி ஒவ்வொருவரும் தனித்தனியாக மனு செய்திருந்தனர்.
மேலும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் இருப்பதால் அவர்களும் வரவில்லை. மேலும் இந்த வழக்குல் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் அரசுத்தரப்பில் ஆஜராகக் கூடாது, புதுச்சேரி வழக்கறிஞர்கள் தான் ஆஜராக வேண்டும் என்று கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதையடுத்து இந்த வழக்கை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
ராமேஸ்வரத்தில் ஜெயேந்திரர்:
இந் நிலையில் ஜெயேந்திரர் நேற்று ராமேஸ்வரம் வந்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோயம்புத்தூரிலிருந்து தனி விமானத்தில் மதுரை வந்து அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் வந்த அவரை பஜ்ரங்தாஸ் பாபா மடம் நிர்வாகிசீதாராம் தாஸ், ராமநாதபுரம் வர்த்தகர் சங்கத் தலைவர் தனபால், பாஜக செயற்குழு உறுப்பினர் முரளிதரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.பின்னர் அவர் ராமேஸ்வரம் சங்கர மடத்தில் சென்று தங்கினார். மடத்துக்குள் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.
இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய ஜெயேந்திரர் கோபுர தரிசனம் செய்தார். பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனை சேது தீர்த்தக்கட்டத்துக்கு சென்று ரத்னாகரம் (பாக்ஜலசந்தி), மகோததி (மன்னார் வளைகுடா) ஆகிய இரண்டு கடல்களும் சங்கமிக்கும் இடத்தில் புனிதநீராடுகிறார்.












Click it and Unblock the Notifications