கர்நாடகத்தின் பாவலா-கருணாநிதி தாக்கு
கோவை:காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த பிரதமர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் கர்நாடகத்தின் பிடிவாதப்போக்கு நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தானது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கோவையில் அரசின் நலத் திட்ட உதவிகளைத் தொடங்கி வைத்து கருணாநிதி பேசுகையில்,
தமிழ்நாடு இன்று சோதனைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு தீபகற்பம் போலத்தான் தமிழகம் ள்ளது. ஒரு பக்கம் கர்நடாகம்,இன்னொரு பக்கம் ஆந்திரா, இன்னொரு பக்கத்தில் கேரளா.
அவர்களுக்கும் நமக்கும் பகை இல்லை. பகை வளர்வதற்கான ஒரு புகை கூட எழக் கூடாது என்று எண்ணுகிறவன் நான்.
இந்தியா நம் நாடு என்று பேசுகிறோம். ஆனால், தமிழகம் தண்ணீர் இன்றி தவித்தால் தர மறுக்கிறோம். தமிழகத்துக்கு தண்ணீர் தரக் கூடாது,தமிழகத்தின் தேவைகளை தரக் கூடாது என தீர்மானம் கொண்டு வருகிறோம். வன்முறைகளில் கூட ஈடுபடுகிறோம்.
இதை இனியும் பொறுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்கக் கூடாது. தடுக்க வேண்டியவர்கள் தடுக்க வேண்டும். அமைதியான நிலையை உருவாக்கவேண்டியவர்கள் அதை உருவாக்க வேண்டும்.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு மகிழ்ச்சி தரக் கூடியது அல்ல. அதே நேரத்தில் துயரத்தை தரக் கூடியதும் அல்ல. அதே போலகர்நாடகத்துக்கும் சில குறைகள் இருக்கலாம்.
ஆனால், ஏகப்பட்ட குறைகள் இருப்பது போல கர்நாடகம் பாவலா காட்டிக் கொண்டு தமிழர்கள் மீது சீறிப் பாய்கிற நிலைமை இருக்கிறது.
காவிரி இறுதித் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு எல்லா வகையிலும் நன்மை செய்துவிடவில்லை. சாதகமும் இருக்கிறது, பாதகமும் இருக்கிறது.பாதகங்களைக் காட்டி, இதையெல்லாம் சரி செய்து கொடுங்கள் என்று நாம் கேட்க இருக்கிறோம்.
கர்நாடகமும் அப்படி செய்யலாம். அதைவிட்டுவிட்டு வன்முறையில் ஈடுபட்டு இரு மாநிலங்களுக்கு இடையே நிரந்தரமான பகையைஉருவாக்குவது ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல. இதை ஒரு எச்சரிக்கையாக மத்திய அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்.
நான் தான் அனுபவிப்பேன், மற்றவர்களை பட்டினி போடுவேன் என்று கூறுகிற அளவுக்கு ஒரு மாநிலம் வருமானால், அந்த மாநில மக்கள்இந்தியர்கள் அல்லவா?. இதுவரை அவர்களை இந்தியர்கள் என்று இணைத்துக் கொண்டு யாராவது நாடகமாடினீர்களா?
எல்லா பக்கமிருந்தும் நமக்குத் தடைகள் வந்து கொண்டிருக்கின்றன. தடைகளை நீக்க நம் ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டும். நாம் தமிழர்கள்என்ற உணர்வைப் பெற்று தெலுங்கர், கன்னடர், மலையாளிகளோடு சண்டைக்குப் போக வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அங்கேகன்னடியர், இங்கே தமிழர்கள். ஆனால், அனைவரும் இந்தியர்கள் தான்.
இந்தியாவின் இயற்கை வளத்தை அனைவரும் பங்கிட்டுக் கொள்வோம். அதற்கு முதலில் தண்ணீர் சண்டை ஓய வேண்டும். வானம் வழங்கியகொடை தான் ஆறு. அவை பொதுவானவை. அதை நாம் நியாயமாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
நாமெல்லாம் இந்தியர்கள் அல்லவா? நாம் பிரிந்து போகலாமா என்று புத்திமதி சொன்னார்கள். இப்போது நான் உங்களைக் கேட்கிறேன். நீங்கள்பிரிந்து போகச் சொல்கிறீர்களா?. எங்களுக்குத் தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்லி எங்களோடு வாழாதே, பிரிந்து போ என்கிறீர்களா?நாங்கள் பிரிந்து போக தயாராக இல்லை.
இந்திய ஒற்றுமையை காப்பாற்றுவோம். இயற்கை எங்களுக்கே சொந்தம் என்று யாராவது வாதாடினால் அது இந்தியாவுக்கு நல்லதல்ல. இந்தநெருக்கடியில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காமல் புரட்சி செய்வோம் என கர்நாடகம் பிடிவாதம் பிடிக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பையேஉடைத்தெறிவோம் என முல்லைப் பெரியாறு விஷயத்தில் நம்மை இழிவுபடுத்துகிறது. இது போதாது என்று நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம்கொண்டு வரப் போவதாகவும் சொல்லப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் வந்தால் அதை நம் மாநில உறுப்பினர்கள் எப்படி சந்திப்பது, எப்படி விவாதிப்பது என்பது குறித்து விவாதிக்கஅமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்கிறார்.
இந்தியாவின் பிரதமராக இருந்த தேவ கெளடாவே நாட்டின் ஒற்றுமைக்கு விரோதமான நிலைக்கு வந்திருக்கிறதுபோது வேறு என்ன செய்யமுடியும். மத்திய அரசும் பிரதமரும் சோனியாவும் தலையிட்டு சுமூக நிலையை உருவாக்கினால் தான் அனைத்து மாநிலங்களும் சகோதரர்களாகஇருக்க முடியும்.
இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு நதிகளை இணைப்பது தான். முதலில் அதைச் செய்ய முன் வாருங்கள். அப்போது தான் நாடு உருப்படும். அதைவிரைவாகச் செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும்.
இதற்காக திமுக சார்பில் மாபெரும் மாநாட்டை தேசிய அளவில் நடத்தப் போகிறோம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications