குளு குளு பார் தேவையா? ராமதாஸ் கொதிப்பு:அரசு மறுப்பு-பார் தொடங்கிய 5 பேர் கைது!
சென்னை:ஒவ்வொரு மாநிலமும் தகவல் தொழில்நுட்பத் துறை, தொழில்துறையில் முன்னேறிக் கொண்டுள்ள நிலையில் டாஸ்மாக் மது பார்களை குளு குளுவசதி கொண்டதாக மாற்றுவது ரொம்ப அவசியமா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காட்டமாக கேட்டுள்ளார்.
தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளில் உள்ள பார்களை குளு குளு வசதியுடன் கூடியதாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டதாக செய்திகள்வெளியாகின. வருகிற 10ம் தேதிக்குள் இந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து வேகம் வேகமாக பார்கள் குளு குளு வசதிக்கு மாற்றப்பட்டன. குஷன் இருக்கைகள், கண்ணாடி டேபிள்கள், வாஷ் பேசின் உள்ளிட்டவசதிகளுடன் கூடியதாக இவை மாற்றப்பட்டன.
ஒவ்வொரு பாருக்கும் ரூ. 3 லட்சம் செலவில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வந்தன. தமிழகம் முழுவதும் மொத்தம் 300 பார்களில் இந்த குளுகுளு வசதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
சேலத்தில் குளு குளு வசதியுடன் கூடிய பார்கள் நேற்று முதல் இயங்கவும் தொடங்கி விட்டன. இந்த பார்களில் நுழைவுக் கட்டணமாக 10 ரூபாயும்வசூலிக்கப்படுகிறது.
இதற்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இடிந்து போன நிலையில் உள்ள பள்ளிக் கூடங்கள் தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளன. இந்த அவல நிலையை மாற்ற ஒரு நடவடிக்கையும்இல்லை.
இந்த நிலையில் முதல் கட்டமாக 300 டாஸ்மாக் மதுக் கடைகளில் ஹைடெக் பார்களை அமைக்க வேண்டும் என அவசரமாக உத்தரவுபிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அங்கே குளு குளு வசதியாம், குஷன் இருக்கைகளாம், கண்ணாடி மேசைகளாம், விற்பனைச் சீட்டுக்கு கணிணிகளாம், ஊற்றிக் கொடுப்பதற்குசீருடைப் பணியாளர்களம்! இப்படியும் செய்தி வெளியாகியிருக்கிறது.
தொழில் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றன.ஆனால் மது விற்பனையிலும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலும் தமிழகம் முதலிடத்தை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.
இதில் கடந்த ஆண்டு சாதனை இந்த ஆண்டில் முறியடிக்கப்பட்டிருக்கிறது என்று ஆண்டுதோறும் சட்டசபையில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் மானியக் கோரிக்கையின்போது பெருமையோடு அறிவிக்கப்பட்டு வருகிறது. இது பெருமையும் அல்ல, சாதனையும் அல்ல.
குடிப்பது பாவம், குடித்து விட்டு வருவது கேவலம் என்ற நிலைமை ஒரு காலத்தில் இருந்தது. குடித்திருக்கிறோம் என்று சொல்லவேவெட்கப்படுவார்கள். மறைத்து மறைத்துக் குடித்தார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது.
அரசே சில்லறை விற்பனைக் கடைகளை நடத்துவதே இதற்குக் காரணம். அரசாங்கப் பள்ளிக் கூடத்தில் படிக்க வைப்பதே கேவலம் என்றுகருதுகிறவர்கள் கூட அரசாங்க மது விற்பனைக் கடைகளை அரசாங்கம் ஏற்று நடத்த ஆரம்பித்த பின்னர், அந்தக் கடைகளில் குடிப்பது கெளரவம்என நினைக்கத் தொடங்கியுள்ளனர்.
அரசாங்கம் கடைகளை நடத்தத் தொடங்கிய பின்னர் குடிகாரர்களின் எண்ணிக்கை பெருகி விட்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இத்தகையநிலையில் குளு குளு பார்களை ஏற்படுத்துவது என்பது குடியையும், குடிகாரர்களையும் பெருக்கவே உதவும்.
வருங்காலத்தில் இந்த பார்களில் கவர்ச்சி நடனம் என்கிற அளவுக்கு நிலைமை உருவாகிப் பண்பாட்டு, கலாச்சாரச் சீரழிவுக்கு வழி வகுத்து விடும்.
தெருக்கள் தோறும், ஊரகப் பகுதிகளில் ஊர் தோறும் கடைகளை திறப்பதும், குளு குளு வசதியுடன் பார்களைத் திறப்பதும் ஒரு மக்கள் நல அரசுமேற்கொள்ளும் மக்கள் நலப் பணியாகாது.
மதுக் கடைகளை மூட வேண்டும், திறக்கப்பட்டுள்ள பார்களை மூட வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.
ஆனால் இதுவரையில் இல்லாத குளு குளு பார்களைத் திறக்க அரசு உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை தருகிறது. எனவே இந்த அறிவிப்பை அரசுகைவிட வேண்டும். அத்தோடு சில்லறை விற்பனைக் கடைகளின் எண்ணிக்கையையும் பாதியாக குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
அரசு மறுப்பு:
இதற்கிடையே, குளு குளு வசதியுடன் கூடிய பார்களை அமைக்க அரசு உத்தரவிடவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாகதமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குளு குளு வசதியுடன் கூடிய பார்கள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ளசெய்திகள் தவறானவை.
இதுதொடர்பாகவோ அல்லது நுழைவுக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏசி பார் தொடங்கிய 5 பேர் கைது:
இதற்கிடையே, சேலத்தில் சில குளு குளு பார்கள் நேற்று முதல் இயங்கத் தொடங்கி விட்டன. சில பார்களில் டிவி வசதியும் கூடஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்தப் பார்களில் அமர்ந்து குடிக்க குடிமக்களிடையே பலத்த வரவேற்பும் நிலவியது. 10 ரூபாய் என்ட்ரன்ஸ் கட்டணத்தைக் கொடுத்து விட்டுஉள்ளே சென்று குளுகுளு வசதியை அனுபவித்தபடி சரக்கை உள்ளே தள்ளி கொண்டாடினர் குடி மக்கள்.
இந்த நிலையில் அரசின் அனுமதி பெறாமல் குளு குளு பார் தொடங்கியதற்காக பார் உரிமையாளளர் உள்ளிட்ட 5 பேரை சேலம் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடை அருகே குளு குளு வசதி கொண்ட பார் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பாருக்கு நேற்றுமாலை போலீஸார் வந்தனர். ஏசி பாருக்கு சீல் வைத்த போலீஸாரும், டாஸ்மாக் அதிகாரிகளும், அனுமதியின்றி பார் நடத்தியதாக பார்உரிமையாளர் மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேரைக் கைது கைது செய்தனர்.
மேலும் கடை மேற்பார்வையாளர் சுப்ரமணியன், வட்டார மேற்பார்வையாளர் அன்பழகன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக்அதிகாரிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications