தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் குண்டு வீசித் தாக்குதல்-படகு மூழ்கடிப்பு!
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு படகு மூழ்கடிக்கப்பட்டது. தமிழக மீனவர்கள்காயமின்றி உயிர் தப்பி கரைக்கு வந்து சேர்ந்தனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் கலியபெருமாள்என்ற நாகை மாவட்ட மீனவர் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாகஉயிரிழந்தார்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் போதாது என்று இலங்கை மீனவர்களும் இப்போது தமிழக மீனவர்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 100 படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென அங்கு இலங்கை மீனவர்கள் வந்தனர்.
நாட்டு வெடிகுண்டுகளை தமிழக மீனவர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு மீனவர்கள் இருந்த ஒரு படகில் குண்டு வந்து விழுந்துவெடித்தது.
நான்கு மீனவர்களும் சுதாரித்துக் கொண்டு கடலில் குதித்தனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டு தங்களது படகுகளில் ஏற்றிக் கொண்டுதப்பித்தனர். குண்டு வீச்சுக்கு ஆளான படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது.
இலங்கை மீனவர்களின் இந்தத் தாக்குதலில் தமிழக மீனவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் ராமேஸ்வரம்மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications