காவிரி: தமிழக-கர்நாடக எம்பிக்கள் மோதல்:கர்நாடகத்துடன் கை கோர்த்த கேரளா
டெல்லி:காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தலாமா என ஆலோசிக்க மக்களவைத் தலைவர் சோம்நாத்சட்டர்ஜி கூட்டிய கூட்டத்தில் தமிழக கர்நாடக எம்பிக்கள் இடையை கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் கூட்டம் பாதியிலேயே முடிந்தது. இதில்எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
நடுவர் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என கர்நாடக எம்பிக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை தமிழகமுதல்வர் கருணாநிதி கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த விவாதத்தால் ஏற்கனவே சிக்கலில் உள்ள தமிழக-கர்நாடக மாநில உறவு மேலும்கெடும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஆனால், கர்நாடகம் தொடர்ந்து விவாதத்துக்காக வலியுறுத்தியதால் இது குறித்து இரு மாநில எம்பிக்களின் கூட்டத்தை சபாநாயகர் சாட்டர்ஜிகூட்டினார்.
மாலை 4 மணிக்கு நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் உள்ள அரங்கில் ஆலோசனை இந்த கூட்டம் நடந்தது. எம்.பிக்கள் அகர வரிசைப்படிபேச அழைக்கப்பட்டனர்.
முதலில் பேசிய கர்நாடக பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தீவிர ஆர்எஸ்எஸ்காரருமான அனந்த குமார், காவிரி நடுவர் மன்றதீர்ப்பு குறித்து 193வது விதியின் கீழ் விவாதம் நடத்த வேண்டும். நடுவர் மன்ற தீர்ப்புகள் பற்றி நாடாளுமன்றத்தில் பல முறை விவாதம்நடந்துள்ளது. எனவே காவிரி பிரச்னையையும் இரு சபைகளிலும் விவாதம் செய்வதில் தவறேதும் இல்லை. ஏற்கனவே யமுனா-சட்லெஜ் நதி நீர்பிரச்னை பற்றி விவாதம் நடந்துள்ளது என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, இந்த தீர்ப்பு பற்றி விவாதம் நடத்தினால் இருமாநிலங்களிலும் தேவைற்ற பதட்டம் ஏற்படும். இந்த விவாதத்தால் எந்த தீர்வும் காண முடியாது. நடுவர் மன்ற தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில்விவாதம் நடந்துள்ளதாக அனந்த குமார் கூறுவது பொய்யான தகவல். இறுதி தீர்ப்பு குறித்து இரு மாநில அரசுகளும் ஆராய்ந்து வருகின்றன.மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு நிகரான நடுவர் மன்றம் உள்ளது. எந்தவித பாதகத்தையும் முறையிட்டு தீர்வு காண அங்கு ஏராளமானவழிகள் உள்ளன.
அதை விட்டு விட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவது பிரச்னையை மேலும் சிக்கலாக்கும். இருமாநில உறவுகளும், நல்லிணக்கமும்பாதிக்கப்படும். மக்களிடையே பதட்டமும் தேவையற்ற காழ்ப்புணர்ச்சியும் உண்டாகும் என்றார்.
ஆனால், பாலு பேசிக் கொண்டிருந்தபோதே அவரை பேசவிடாமல் கர்நாடக எம்பியான ஜாலப்பா குறுக்கிட்டார் (இவரது பெயர் ஒரு கொலைகேஸில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது)
ஜாலப்பா பேசுகையில், தமிழ்நாடு அண்ணன் போன்றது. கர்நாடகம் தம்பியைப் போன்றது. தம்பியை, அண்ணன் ஒருபோதும் ஏமாற்றக் கூடாதுஎன்றார்.
ஜாலப்பாவின் இந்த பேச்சு தமிழக எம்பிக்களிடையே கடும் எரிச்சலைக் கிளப்பியது. நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. தமிழகம் எப்போதும்யாரையும் ஏமாற்றியதில்லை என தமிழக எம்பிக்கள் குரல் தந்தனர். பதிலுக்கு கர்நாடக தரப்பிலும் எதிர்ப்பு குரல்கள் எழுப்பின.
கர்நாடகத்தில் கலவரம் ஏற்பட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து தமிழக எம்.பிக்கள் ஆவேசமாக பேசினர். இந்த கடும்வாக்குவாதத்தால் பெரும் சலசலப்பு நிலவியது.
இதையடுத்து கூட்டத்தை பாதியிலேயே ரத்து செய்த சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, எல்லா எம்பிக்களும் டீ அருந்திவிட்டு செல்லுங்கள் என்றுசொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். சுமார் 40 நிமிடங்கள் நடந்த இக்கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சாட்டர்ஜி, நடுவர் மன்றம் என்பது ஒரு சட்டபூர்வமான அமைப்பு, அதன் தீர்ப்பை விமர்சிக்க கூடாது என்றாலும்தீர்ப்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று சில உறுப்பினர்கள் விரும்பியதால் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். நிதி மசோதாவைநிறைவேற்றிய பின்னர்தான் நடுவர் மன்ற தீர்ப்பு குறித்து விவாதம் நடத்துவதா? வேண்டாமா என முடிவு செய்யப்படும்.
இந்த விஷயத்தில் உடனடியாக எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்த பின்னரேமற்ற பிரச்னைகளை கருத்தில் கொள்ள முடியும் என்றார்.
கர்நாடகத்துக்கு கேரளா ஆதரவு:
இக்கூட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த எம்.பிக்களும் கலந்து கொண்டனர். தமிழக, கர்நாடக எம்.பிக்கள் கடுமையாக பேசிக் கொண்டதைஅமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்தனர்.
பின்னர் கர்நாடகத்துக்கு முழு ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் காவிரி உட்பட எந்த பிரச்சனை பற்றியும் விவாதம் நடத்தஅனுமதி உண்டு. எனவே கர்நாடகத்தின் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும் என கேரள எம்பிக்கள் கூறினர்.
காவிரி பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர்கள் கூறினர்.
ஓடிப் போன அய்யர்:
இந்தக் கூட்டம் ஆரம்பிக்கும்போது வந்திருந்த மயிலாடுதுறை எம்பியான மணிசங்கர் அய்யர், தலையை காட்டிவிட்டு அடுத்த சில நிமிடங்களில்அங்கிருந்து போய்விட்டார். இந்த விவாதத்தில் அவர் கலந்து கொள்ளவே இல்லை. இத்தனைக்கும் காவிரி டெல்டா மாவட்டத்தில் தான் அவரதுதொகுதி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்பட அனைத்து பிற காங்கிரஸ் எம்பிக்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
திமுக, பாமகவை சேர்ந்த எம்பிக்கள் தான் மிகவும் தீவிரமாக குரல் தந்து பேசினர்.
மத்திய அமைச்சர்கள் வாசன், அன்புமணி ஆகியோர் மாநிலங்களவை எம்பிக்கள் என்பதால் இக் கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை. அதேபோல அதிமுகவின் 12 எம்பிக்களும் மாநிலங்களவையில் தான் உள்ளனர் என்பதால் அழைக்கப்படவில்லை.
மதிமுக சார்பில் கிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications