கேலிகளை மீறி வெற்றி பெற்ற பந்த்-கருணாநிதி
சென்னை:அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் பங்கேற்காத நிலையிலும், அவர்களின் கேலிகள், நகைப்புகளை மீறி சமூக நீதிக்கு ஆதரவாக நடந்த பந்த் வெற்றி பெற்றது, தமிழ்நாடே அசைவற்றுப் போனது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
27 சதவீத இட ஒதுக்கீட்டை தடை செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து தமிழகத்தில் நேற்று மாநிலம் தழுவிய பந்த் நடைபெற்றது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துப் போனது.
பந்த் வெற்றி பெற்றது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
மார்ச் 29ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் நம்பிக்கை நட்சத்திரத்தின் வெளிச்சத்தை காணவே முடியாத அளவுக்கு, கண்ணிருந்தும் குருடர்களாய், ஆக்கப்பட்டு விட்டார்கள் என்ற அபாய அறிவிப்பு 1 மணிக்கு எனக்குக் கிடைத்தது.
அப்போது சட்டப் பேரவைய கூட தனது முற்பகல் நிகழ்ச்சியை முடிக்கவில்லை. அப்போதுதான் பாமக தலைவர் கோ.க.மணி தனது பேச்சை முடித்து விட்டு பேரவையிலிருந்து திரும்பியவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எதிர்பாராத செய்தி வந்து விட்டதே என வேதனைப்பட்டார். நான் இது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று சொன்னேன்.
பின்னர் அன்று மாலை மகேந்திரா தொழில் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியை முடித்து விட்டு, காரில் திரும்பியபோது, காரில் இருந்தபடியே கைத் தொலைபேசி மூலம் நான், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் அனைத்துக் கட்சித் தலைவர்களைத் தொடர்பு கொண்டு கூட்டத்துக்கு அழைத்தோம்.
அண்ணா அறிவாலயத்தில் 29ம் தேதி இரவு 8 மணிக்கு தலைவர்கள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தின் வேண்டுகோளாக அதிமுக, மதிமுக, தேமுதிக கட்சிகளின் ஆதரவு கோரப்பட்டு அதற்கான கடிதங்கள் அன்றிரவே அனுப்பி வைக்கப்பட்டன.
மூன்று கட்சிளில் தேமுதிக மட்டும் ஆதரவு தருவதாக கூறி அறிக்கை வெளியிட்டது. மற்ற இரு கட்சிகளான அதிமுகவும், மதிமுகவும் ஆதரவு தர முன்வரவில்லை. அதற்குமாறாக அடுத்த நாள் காலையில் அதிமுகவின் கொறடாவும், முன்னோடித் தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் அனைத்துக் கட்சிக் கருத்தை கேட்காதது ஏன் என்று திமுக தோழமைக் கட்சி அணியைக் குற்றம் சாட்டி, அதனால்தான் ஆதரவு தரவில்லை என்பது போல செய்தி ஏடுகளில் பெரிய அளவில் செய்தி வந்தது. இதுவும் எதிர்பார்த்தது போல நடந்ததுதான்.
1989ம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோது காவிரிப் பிரச்சினை தொடர்பாக நான் கையெழுத்திட்டு அனுப்பி இந்த அம்மையாரை ஒருமுறை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்தபோது, பிரச்சினைக்கு மூல காரணமே கருணாநிதிதான் என்று கூறி வராமல் புறக்கணித்தார்.
1998ம் ஆண்டு காவிரிப் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியபோதும் அது கண்துடைப்பு நாடகம் என்று கூறி புறக்கணித்தார். இதெல்லாம் பழைய கதைகள்.
இப்போது தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் அறிவித்திருப்பது கண் துடைப்பு நாடகம், கேலிக்கூத்து மட்டுமல்ல, நகைப்புக்குரிய விஷயம் என்று கூறியிருக்கிறார்.
தமிழக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் எதிர்கால வாழ்க்கைக்காக பந்த் நடத்துவது கேலிக்குரியதாகவும், நகைப்புக்குரியதாகவும் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன என்பைத தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்து கொள்வார்கள்.
ஜெயலலிதாவின் வழியிலேயே, அவரது சகோதரர் விடுத்துள்ள அறிக்கையில், பொது வேலைநிறுத்த நாளிலே பந்த் நடத்துவது ஏமாற்று வேலை என்று கேட்கிறார். சேராத இடம் தனிலே சேர்ந்ததால் எப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகி விட்டார் பாருங்கள்.
எனவே அவர்கள் எப்படி நம்மை அவமானப்படுத்தினாலும், நாட்டு நலனுக்காக மானத்தைக் கூட பெரிதுபடுத்தாமல் ஒத்துப் போவது நல்லது என்ற அடிப்படையில், நாம் அனுப்பிய அழைப்பைக் கூட லட்சியம் செய்யாதவர்களுக்கு, இந்தியாவில் உள்ள நம் மக்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் எக்கேடு கெட்டால் என்ன -
ஆதிக்கபுரியினர், அமோக வாழ்வு பெற்றால் அது ஒன்றே நமது சொர்க்கம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு, வாழுபவர் ஒன்று கூடி நடத்தும் சதியில் வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர்.
கண் துடைப்பாம், கண் துடைப்பு. இது கண் துடைப்பு அல்ல, கண்ணீர் உடைப்பு. இந்தக் கண்ணீர்- அடக்க முடியாமல் , அடித்தட்டு மக்கள் புழுக்களாய், தேரைகளாய், பொட்டுப் பூச்சிகளாய், மடிந்து போகாமல் -
புரட்சிக் குரல் எழுப்ப எழுந்திடும் போர்ப் படையின் மீது, காரி உமிழ்வது போல இந்தப் பெண்மணியார், கண்துடைப்பு என்கிறாரே, இதுவும் நாம் எதிர்பார்த்ததுதான். நாகத்திடம் நச்சுப் பல்லையும், இவர் போன்றோரிடம் நாசகாலச் சொல்லையும் தானே எதிர்பார்க்க முடியும்.
இவர்கள் எல்லாம் கலந்து கொள்ளாமலேயே நாம் எதிர்பார்த்தபடி மிகவும் வெற்றிகரமாக தமிழ்நாடே சமூக நீதிக்கு ஆதரவாக இன்று ஒரு நாள் அசைவற்றுப் போனது என்கிற அளவுக்கு பொது வேலைநிறுத்தம் வெற்றி பெற ஒத்துழைத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், செயல்வீரர்களுக்கும்,
உடன் பிறப்புகளுக்கும், இதனை வெற்றிகரமாக ஆக்கித் தந்த தொழிற்சங்கங்களுக்கும், தொழிலாளர்களுக்கும், வணிகர்களுக்கும், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும், அனைத்துத் தரப்பினருக்கும், பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications