மழையும் பெய்கிறது, வெயிலும் வெளுக்கிறதுமண்டை காயும் தமிழக மக்கள்
சென்னை: தமிழகம் முழுவதும் அடுத்த 2 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேசமயம், வட மாவட்டங்கள் பலவற்றில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழகத்தில் தற்போது கோடைகாலம் கோலாகலமாக நடந்து வருகிறது. வெயில் நகரங்ளான சென்னை, வேலூர், சேலம் உள்ளிட்ட பல நகரங்களில் தினசரி வெப்ப நிலை 100 டிகிரியைத் தாண்டி விட்டது.
வேலூரில் 105 டிகிரியைத் தாண்டி எகிறிக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆனால் தென் மாவட்டங்களில் கோடை மழை வெளுத்துக் கட்டி வருகிறது.
கன்னியாகுமரி முதல் தென் மாவட்டங்கள் பலவற்றில் நல்ல மழை பெய்து வருகிறது. மழையுடன் சூறாவளிக் காற்றும் அவ்வப்போது வீசி வாழைத் தோட்டங்களை ஒரு கை பார்த்து வருகிறது.
இந்த கோடை மழை காரணமாக தென் மாவட்டங்களில் வெப்பத்தின் கொடுமை சற்றே தணிந்துள்ளது. ஆனால் வட மாவட்டங்களில் அணல் தகிக்கிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அடுத்த இரு நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications