பாலாறு பிரச்சினை-நெடுமாறன் கூறும் யோசனை
காஞ்சிபுரம்:பாலாறுப் பிரச்சினையைத் தீர்க்க கட்சி சார்பற்ற குழுவை அமைத்து, தீர்வுக்கான வழிகள் குறித்து ஆராய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவனர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் பாலாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிரச்சினை குறித்து விவாதிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு நெடுமாறன் பேசுகையில், பாலாறுப் பிரச்சினையத் தீர்க்க முதலில் கட்சி சார்பற்ற குழுவை அமைக்க வேண்டும்.
இந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த பாலாறு பாசனப் பகுதி விவசாயப் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். பாலாறு வடி நிலம் பாலைவனமாகி விடாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து இந்தக் குழு மூலம் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
தமிழகத்தின் 70 சதவீத விவசாய நீர்த் தேவை, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகிய நதிகளை நம்பியே உள்ளது. எனவே இந்த மூன்று நதிகளிலும் தமிழகத்திற்கு உள்ள உரிமையை விட்டு விடக் கூடாது. அப்படி நேர்ந்தால் தமிழம் பாலைவனமாகி விடும்.
கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திர மாநில அரசுகள் எடுத்து வந்த திட்டமிட்ட நடவடிக்கையால் நமது மாநிலத்தின் உணவு உற்பத்தி வெகுவாக குறைந்து போய் விட்டது.
தமிழகத்தில் இன்று விற்பனை செய்யப்பட்டு வரும் அரிசியில் பெரும்பாலானவை கர்நாடகத்திலிருந்தும், ஆந்திராவிலிருந்தும்தான் வருகின்றன என்பதை தமிழக மக்களில் பெரும்பாலானோருக்குத் தெரியாது.
நீதிமன்றத் தீர்ப்புகளை நிறைவேற்றாமல் கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்கள் பிடிவாதம் பிடிக்கும் போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த மாநிலங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மெளனம் காப்பது வியப்பாக உள்ளளது வேதனையாக உள்ளது என்றார் நெடுமாறன்.


Click it and Unblock the Notifications
