நான் அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டது-சரத்குமார் சொல்கிறார்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்மீண்டும் தமிழத்தில் காமராஜர் ஆட்சி மலரும், அந்தப் பொற்காலம் திரும்பி வரும். நான் அரசியலில் நுழையும் சூழல் வந்து விட்டதாகவே உணர்கிறேன். எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக உள்ளேன் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

திமுக, அதிமுகவிலிருந்து விலகி தற்போது தீவிர அரசியலில் இல்லாத நடிகர் சரத்குமார் விருதுநகரில் மறைந்த பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டப் போவதாக அறிவித்தார்.

மணிமண்டபத்தின் மூலம் அவர் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. நாடார் சமுதாயத்தினரை பலமாகக் கொண்டு இந்த கட்சி உருவாக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்த காமராஜர் மணிமண்டப அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று மாலை விருதுநகரில் கோலாகலமாக நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திரண்டு வந்திருந்த ரசிகர்களும், நாடார் சமுதாயத்தினரும் விருதுநகரை குலுக்கி விட்டனர்.

ரூ. 10 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்படவுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவுக்கு சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் குத்து விளக்கேற்றினார். காமராஜர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த பூவராகன் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

நிகழ்ச்சியில், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் கோபாலகிருஷ்ணன், தெட்சண மாற நாடார் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.சுப்ரமணிய ஆதித்தன், தமிழ்நாடு நாடார் பேரவை பொதுச் செயலாளர் சந்திரேசகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நானும், எனது மனைவி ராதிகாவும் நேரில் சென்று அழைப்பு விடுத்தோம். ஆனால், உத்தரப் பிரதேச தேர்தல் காரணமாக தன்னால் வர இயலாது என்றும் தனது சார்பில் மத்திய அமைச்சர் ஒருவரை அனுப்புவதாகவும் அவர் அறிவித்தார்.

அந்த அமைச்சரும் விமான நிலையம் வரை வந்து விட்டார். ஆனால் கடைசி நேரத்தில் யார் கொடுத்த நிர்ப்பந்தமோ தெரியவில்லை, அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

அடுத்த கட்டம் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. நான் அடுத்தவர் முதுகில் ஏறி சவாரி செய்பவன் அல்ல, அது எனக்குப் பிடிக்காது. 2020 முதல் 2045ம் ஆண்டு வரை இந்தியாவில் இளைஞர்கள்தான் அதிகம் இருப்பார்கள் என கூறப்படுகிறது. அந்த இளைஞர் சமுதாயத்தை வழி நடத்திச் செல்ல ஆசைப்படுகிறேன்.

அப்படிக் கூறுவதால் எனக்கு முதல்வர் பதவிக்கான ஆசை வந்து விட்டதாக கூறி விடக் கூடாது. சிலர் சரத்குமார் கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்தார்கள். அதனால் கூட பலர் இன்றைய நிகழ்ச்சிக்கு வராமல் இருந்திருக்கலாம்.

கட்சி ஆரம்பிப்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். அது எனக்கு நன்றாக தெரியும். இது முடிவு அல்ல, தொடக்கம்தான்.

எனது ரசிகர்களும், சமுதாய மக்களும் குணத்தால் தங்கங்கள். சீண்டினால் சிங்கங்கள். இனி அடிக்கடி உங்களை மேடைகளில் சந்திக்கப் போகிறேன். நீங்கள் நினைத்தால் நாம் சரித்திர சக்தியாக முடியும் என்றார் சரத்குமார்.

அரசியலில் நுழைவதாக சரத்குமார் வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும் கூட நாடார் சமுதாயத்தினர் ஒன்று சேர்ந்து என் பின் வந்தால் கட்சி ஆரம்பிக்கத் தயார் என்பது போன்ற கருத்தை பிரதிபலித்துத்தான் சரத்குமார் பேசியிருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தலித் கட்சித் தலைவர்கள், யாதவ சமுதாயத் தலைவர்களும் கலந்து கொண்டது பலருக்கு வியப்பைக் கொடுத்தாலும் கூட, பெரும்பான்மையான தலைவர்கள் நாடார் சமுதாயத்தினரே என்பது குறிப்பிடத்தக்கது.

சரத்குமார் நடத்திய இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பெரும் திரளான சரத்குமார் ரசிகர்கள் கலந்து கொண்டனர். நாடார் சமுதாய சங்கங்கள் சிலவற்றை இக்கூட்டத்தில் காண முடியவில்லை. அவர்கள் சரத்குமாரை புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல காங்கிரஸ் கட்சியினரும் இந்த நிகழ்ச்சியை முழுமையாக புறக்கணித்து விட்டனர்.

நிகழ்ச்சியின் முக்கிய அழைப்பாளர்களாக புதுவை முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இருவரும் நிகழ்ச்சிக்கு வரவே இல்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து யாரும் வராததால் சரத்குமார் பெரும் அப்செட் ஆகி விட்டார்.

சில தலைவர்கள்தான் காங்கிரஸாரை வர விடாமல் தடுத்து விட்டனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அது முதல்வராக இருக்க முடியாது என்று அவர் மேடையிலேயே நேரடியாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இனி படிப்படியாக புதிய கட்சிக்கான வேலையை சரத்குமாரும், நாடார் சமுதாயத்தினரும் விரைவுபடுத்துவார்கள் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+