இலங்கை பதற்றம்: இரவில் தனுஷ்கோடிக்குள் நுழைய தடை
ராமேஸ்வரம்:இலங்கையில் நிலவும் அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு தனுஷ்கோடிக்கு இரவில் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதலை தீவிரப்படுத்த ஆரம்பித்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொளப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மிகவும் அருகில் உள்ள பகுதி ராமேஸ்வரம் என்பதால் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மிக தீவிர கண்காணிப்பு மேற்ெகாள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக ராமேஸ்வரத்தைச் சுற்றிலும் உள்ள 21 தீவுகளிலும் பலத்த கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்படை, கடலோரக் காவல் படை, கடலோர போலீஸார் உள்ளிட்டோர் இந்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தின் பாதுகாப்பு கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அரிச்சல்முனைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்பும், சோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு வரும் அகதிகள் தீவிரமாக விசாரிக்கப்பட்ட பின்னரே மண்டபம் முகாமுக்கு அனுப்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியிலும் கண்காணிப்பு பல மடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து இலங்கை வெகு அருகே என்பதால் தனுஷ்கோடியில் அதிக அளவில் பாதுகாப்பும், கண்காணிப்பும் போடப்பட்டுள்ளது.
இங்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை யாரும் செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களிலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications