ராஜ்யசபாவை உலுக்கிய மதுரை வன்முறை
டெல்லி:மதுரையில் நடந்த வன்முறைக்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி ராஜ்யசபாவில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் சபை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை சபை கூடியதும் மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி அதிமுக எம்.பிக்கள் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. திமுக ரவுடிகள் சட்டத்தைத் தங்களது கையில் எடுத்துக் கொண்டு மதுரையில் கடும் தாக்குதலில் இறங்கியுள்ளனர். இதற்கு காவல்துறையை தனது பொறுப்பில் கொண்டுள்ள கருணாநிதி பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.
அதிமுகவினரை அமருமாறு ராஜ்யசபா துணைத் தலைவர் ரஹ்மான் கான் பலமுறை கோரியும் அதிமுகவினர் அமரவில்லை. இதனால் சபை இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு சபைமீண்டும் கூடியபோது பாஜக உறுப்பினர் எம்.எம். ஜோஷியை ரஹ்மான்கான் பேச அழைத்தார். அப்போது மீண்டும் அதிமுகவினர் கோஷமிட ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர்.
அதேசமயம், குஜராத் போலி என்கவுண்டர் விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் எழுப்பினர். இதனால் அவையில் பெரும் அமளி நிலவியது. இதனால் சபை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications