For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி தமிழக அமைச்சரவை பாராட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:முதல்வர் கருணாநிதியின் சீரிய தலைமையின் கீழ் இயங்குவதற்கு வாய்ப்பு அளித்ததற்காக முதல்வருக்கு தமிழக அமைச்சரவை பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளது.

முதல்வர் கருணாநிதி தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் முதல்வரைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாராட்டுத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்ததாவது,

பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் வழித்தோன்றல் என்னும் உரிமையும், இன மறுமலர்ச்சி ஏந்தல் அண்ணாவின் தம்பி என்னும் தகுதியும், அனைவரிடத்தும் தோழமை காத்து உடன்பிறப்பாக அரவணைக்கும் பண்பும், அரியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் மதித்து நடக்கும் மாண்பும், சட்டமன்ற மரபினைக் காத்திடும் கடமை உணர்வும் நிறைந்து,

ஜனநாயகம் நிலைத்திடவும், சமத்துவம் தழைத்திடவும், சம தர்மம் பரவிடவும், சமயச் சார்பற்ற நெறி நின்று மனித நேய மாண்புகளை வளர்த்திடுவதில் வித்தகராக விளங்கிடும் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்றப் பணி 50 ஆண்டு நிறைவடைவதை எண்ணி இந்த அமைச்சரவை பெருமிதமும், மகிழ்ச்சியும் கொள்கிறது.

தகுதியும், சிறப்பும் பெற்ற தமிழக சட்டசபையிலே 50 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய மற்றொருவர் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இல்லை என்னும் தனிப்பெருமையும் அவருக்கு உண்டு. சட்டசபை மரபுகளில் பட்டறிவு மிக்கவராகவும், முத்தமிழ் வித்தகராகவும், தலை சிறந்த நிர்வாகியாகவும், தமிழக அரசினை இயக்குவதுடன் மட்டுமல்லாமல், மத்திய அரசுக்கும் தகுந்த வழிகாட்டும் அரசியல் மேதையாகவும் விளங்குகிறார் கருணாநிதி.

கவிஞர், கட்டுரையாளர், கதாசிரியர், நாடக ஆசிரியர், நாடக நடிகர், திரைப்பட கதை வசனகர்த்தா, மேடைப்பேச்சாளர் என்ற அனைத்துத் தளங்களிலும் தனித்தடம் பதித்தவர். அரசியல் ஞானியாகவும், முத்தமிழறிஞராகவும், நிகரற்ற திறன் வாய்ந்த நிர்வாகியாகவும், திராவிடப் பெருந்தலைவராகவும், விளங்கி வரும் கருணாநிதி,

தமது சட்டமன்றப் பணியில் 50 ஆண்டுகளையும் நிறைவு செய்து பொன் விழாவைக் கொண்டாடும் வேளையில், அவரது தலைமையில் தமிழகத்திற்குப் பணியாற்றக் கூடிய வாய்ப்பு பெற்றதை ஒரு பேறென உள்ளங் கொண்டு முதல்வர் கருணாநிதியைப் போற்றிப் பாராட்டி வாழ்த்துரைத்து மட்டிலா மகிழ்ச்சி கொள்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பாலாறு பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், புதிய தொழிற் கொள்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X