புதிய ஆயுதப் போட்டியில் அமெரிக்கா:புடின் சரமாரி புகார்- நட்பில் புது உரசல்
ஸ்கோ:புதிய ஆயுதப் போட்டியை அமெரிக்கா தொடங்கியுள்ளது என்று ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு காலத்தில உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளாக கடும் போட்டியுடன் இருந்தவை ரஷியாவும், அமெரிக்காவும். இரு நாடுகளுக்கும் இடையே கடும் பனிப் போர் நிலவிய காலம் அது.
![]() |
சோவியத் யூனியன் துண்டு துண்டாக சிதறியதும் இந்தப் பனிப்போரும் முடிவுக்கு வந்தது. உலகின் ஒரே வல்லரசாக, ஆதிக்க சக்தியாக மாறியது அமெரிக்கா.
தனது மாபெரும் எதிரியான ரஷியா பலவீனமாகிப் போனதால், தனிப்பெரும் சக்தியாக தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்தது அமெரிக்கா.
இந் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ரஷியா இரு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது. இது அமெரிக்கா கடுப்பேற்றியுள்ளது. இந்த ஏவுகணைச் சோதனை குறித்து ஜெர்மனியில் நடந்த ஜி-8 நாடுகளின் கூட்டத்தில் புடின் பேசுகையில்,
![]() |
ஐரோப்பியக் கண்டத்தில் அமெரிக்கா நிறுவ முயற்சிக்கும் ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்திற்குப் பதில் அளிக்கும் வகையிலேயே இந்த ஏவுகணைச் சோதனை நடந்ததாக குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில், புதிய வகை ஆயுதப் போட்டி இப்போது ஆரம்பித்துள்ளது. ஆனால் இதை ரஷ்யா ஆரம்பிக்கவில்லை. ரஷியாவின் நடவடிக்கைகளைப் பார்த்து யாரும் பயப்படத் தேவையில்லை. இது ஆதிக்க மனப்பான்மையுடன் கூடிய சோதனை அல்ல.
உலக பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும் வகையில், இந்த சோதனையை நாங்கள் நடத்தியுள்ளோம். கிழக்கு ஐரேப்பாவில் சிலர் (அமெரிக்கா) புதிய ஆயுதப் போட்டியை உருவாக்க முயலுகின்றனர். அதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எதிர்ப்பைக் காட்டத்தான் வேண்டும் என்றார் புடின்.
செவ்வாய்க்கிழைமை ரஷியா, புதிதாக இரு கண்டம் விட்டு பாய்ந்து தாக்கும் ஏவுகணையை ஏவி சோதனை செய்தது. இந்த சோதனையின் மூலம் அடுத்த 40 ஆண்டுகளுக்கு ரஷியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரஷியா கூறியுள்ளது.
மேலும் போலந்து மற்றும் செக் குடியரசில் புதிதாக ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை அமெரிக்கா அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரஷியாவுக்கு நெருக்கடி தரும் வகையில் அங்கு ஏவுகணைகளைக் குவிக்கத் திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்தே ரஷியா தனது ஏவுகணையை ஏவி சோதனை செய்தது.
ஆனால் ஈரான் போன்ற நாடுகளிடமிருந்து தனது நாட்டுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் ஆபத்து ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலேயே போலந்து உள்ளிட்ட நாடுகளில் ஏவுகணைகளை நிறுத்த முடிவு செய்ததாக அந்த நாடு கூறுகிறது.
இதுகுறித்து ெஜர்மனி பத்திரிக்கை ஒன்றுக்கு அதிபர் ஜார்ஜ் புஷ் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா, ரஷியா இடையிலான நட்பு சிக்கலானதாக உள்ளது. இருப்பினும் அமெரிக்காவின் நட்பு நாடாகவே ரஷியா உள்ளதாக கருதுகிறோம். ரஷியா எங்களது எதிரி அல்ல என்று கூறியுள்ளார்.
புஷ்ஷும், புடினும் ஜூலை 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அமெரிக்காவில் சந்தித்துப் பேசவுள்ளனர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை அகற்ற பேச்சு நடத்துவர் எனத் தெரிகிறது.
அதேசமயம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், ரஷியாவின் சோதனை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்துக் கூறுகையில்,
அமெரிக்க ஏவுகணைத் திட்டத்திற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று புரியவில்லை.
ரஷியாவுடன் எங்களுக்கு பல கருத்து வேறுபாடுகள் உள்ள போதிலும், அவர்கள் கூறுவதையும் நாங்கள் புறக்கணிக்க மாட்டோம். அதேசமயம் எங்களது கருத்துக்களையும் ஆணித்தரமாக வலியுறுத்துவோம் என்றார் ரைஸ்.
போலந்தில் 2011-12ம் ஆண்டுக்குள் 10 ஏவுகணைத் தடுப்பு ஏவுகணைகளை நிறு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதேபோல செக் நாட்டில் ரேடார் கருவிகளை பொருத்த முடிவு செய்துள்ளது. இதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தத் திட்டம் ஈரான், வட கொரியாவுக்கு எதிரானது என்று அமெரிக்கா கூறினாலும் கூட, ரஷியாவின் பாதுகாப்புக்கு இடையூறாகவே இதை அமெரிக்கா செய்ய நினைப்பதாக ரஷியா குற்றம் சாட்டுகிறது.
அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்புத் திட்டம் மற்றும் ரஷியாவின் ஏவுகணைச் சோதனையால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் உரசல் ஏற்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications