கருணாநிதிக்கு வந்த வித விதமான பரிசுகள்
சென்னை:முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து கூற வந்தவர்கள் வித விதமான பரிசுகளை வழங்கி அவரை ஆச்சரியப்படுத்தினர்.
கருணாநிதி தனது 84வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்த நாளை திமுகவினர் மாநிலமெங்கும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
சென்னை நகர வீதிகளில் டியூப் லைட்டுகள் சாலையெங்கும் கட்டப்பட்டிருந்தன. மின் விளக்கு அலங்காரத்தால் ஆன கருணாநிதி, ஸ்டாலின் கட் அவுட்கள் நகரின் பல பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன.
முதல் முறையாக சென்னை நகரில் மு.க.அழகிரியின் படம் இடம் பெற்றிருந்த ஒரு டிஜிட்டல் பேனரையும் காண முடிந்தது.
இந்த மின் விளக்கு அலங்காரத்தில் சென்னை நகரம் இரவிலும் ஜொலிப்புடன் காணப்பட்டது. கடந்த 3 நாட்களாக பிறந்த நாள் விழா நடந்து வந்த வள்ளுவர் கோட்டம் பகுதி சூரியனைப் போல விளக்கொளிகளால் பிரகாசித்தது.
அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் அமர்ந்தபடி கட்சித் தொண்டர்கள், பல்துறைப் பிரமுகர்களின் வாழ்த்துக்களையும், பரிசுகளையும் ஏற்றுக் கொண்டார் கருணாநிதி.
நீண்ட வரிசையில் காத்திருந்து அனைவரும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். வழக்கம்போல மேடையில் பெரிய உண்டியலும் வைக்கப்பட்டிருந்தது. அதில் பலரும் கோவில் உண்டியலில் போடுவதைப் போல பிறந்த நாள் பரிசை பணமாக போட்டனர்.
ராஜ் டிவி அதிபர் ராஜேந்திரன் தனது சகோதரர்களுடன் முதல்வரைச் சந்தித்து வாழ்த்து கூறி ஆசி பெற்றார். பின்னர் முதல்வருக்கு 84 பவுன் தங்கச் சங்கிலியை அணிவித்து மகிழ்ந்தார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு திமுக தொண்டர் தனது நிலத்தில் விளைந்த செவ்வாழையை பரிசாக முதல்வரிடம் கொடுத்தார்.
84 கிலோ எடை கொண்ட வெள்ளிப் பூச்சு கொண்ட இரு யானைச் சிலைகளை திருவண்ணாமலையைச் சேர்ந்த இளைஞர் அணியினர் வழங்கினர்.
இதுபோலவே 84 வெள்ளித் தட்டுக்களில் வித விதமான பழங்கள், பூக்கள் வைக்கப்பட்டும் பரிசாக தரப்பட்டது.
செம்மறி ஆடு ஒன்றை ஒரு தொண்டர் முதல்வரிடம் பரிசாக அளித்தார். அந்த ஆட்டை வாஞ்சையுடன் தொட்டுத் தடவினார் முதல்வர். அப்போது ஆடு அங்கிருந்து துள்ளிக் குதித்து ஓடத் தொடங்கியது. அங்கிருந்த ெதாண்டர்கள் ஆட்டைப் பிடித்து அடக்கினர்.
இப்படியாக வித விதமான பரிசுகள் முதல்வருக்கு வழங்கப்பட்டன. அவற்றை நான்கு மணி நேரம் மேடையில் ெபாறுமையுடன் அமர்ந்து பெற்றுக் கொண்டார் முதல்வர்.












Click it and Unblock the Notifications