கரூர்: குவாரி தொழிலாளியை தீயில்வாட்டி சித்ரவதை-4 பேருக்கு வலைவீச்சு
கரூர்:கரூரில் குவாரி தொழிலாளியை தீயில் வாட்டி சித்ரவதை செய்த 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மேலமஞ்சமேடு கிரமாத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (48). இவர் மாயனூரில் உள்ள மணல் குவாரியில் வேலை செய்து வருகிறார்.
இதே குவாரியில் கட்டளையை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார். இருவருடைய தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த 2 மாடுகள், சில தினங்களுக்கு முன் காணாமல் போயின.
மாடுகளை கோவிந்தராஜன் தான் திருடியிருப்பார் என பன்னீர்செல்வம் சந்தேகப்பட்டு அவரை கடந்த சனிக்கிழமை கட்டளையில் உள்ள தோட்டத்துக்கு அழைத்து சென்றார்.
அங்கு பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் தேவன், செல்வராஜ், முருகேசன் ஆகியோர் கோவிந்தராஜனின் கை, கால்களை கட்டிப் போட்டு, மாடுகள் எங்கே எனக் கேட்டு அவரை தாக்கினர். பின்னர் கரும்பு தோகை மற்றும் குப்பைகளை குவித்து தீ வைத்து கோவிந்தராஜனின் கை, கால்களை பிடித்து கொண்டு கோழியை தீயில் வாட்டுவது போல வாட்டியுள்ளனர்.
தீயில் கருகிய கோவிந்தராஜன் அலறியும் அவரை விடவில்லை. பின்னர் 4 பேரும் கோவிந்தராஜனை அய்யலூர் சுடுகாட்டில் போட்டு விட்டு தப்பிச் சென்றனர்.
நேற்று முன்தினம் காலை அந்த வழியாக வந்தவர்கள் கோவிந்தராஜனை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பன்னீர் செல்வம் உள்ளிட்ட 4 பேர் கும்பலையும் தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
