கொடும்பாவி எரிப்பு அரசியலில் சகஜம்-கிருஷ்ணசாமி
சென்னை:தொண்டர்கள் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது காங்கிரஸ் கட்சியில் சகஜம். நீண்ட காலமாகவே இது நடந்து வருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சீட் கேட்டிருந்தார் கிருஷ்ணசாமி. இதற்காக டெல்லியிலேயே முகாமிட்டு முயற்சித்தும் வந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. வாசன் ஆதரவாளரான ஞானதேசிகன் தட்டிக் கொண்டு போய் விட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த கிருஷ்ணசாமி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறி வந்தார். அவருக்கு ஆதரவாக ஆங்காங்கே கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் சிலர் வீரப்ப மொய்லியின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று இரவு கிருஷ்ணசாமி டெல்லியிலிருந்து திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரை மேற்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு எனக்குத் திருப்தி அளிக்கிறது. விரைவில் மதுரையில் பிரசாரம் செய்யவுள்ளேன்.
ஞானதேசிகனுக்கு ராஜ்யசபா தேர்தலில் சீட் வழங்கப்பட்டுள்ளது. கட்சி மேலிடத்தின் முடிவை மதிக்கிறேன். அதில் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. நானும் சீட் கேட்டிருந்தேன். இருப்பினும் ஞானதேசிகனுக்கே சீட் கிடைத்துள்ளது. இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
கொடும்பாவி எரிப்பு என்பது காங்கிரஸ் கட்சியில் புதிதில்லை. தொண்டர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். தமிழகத்தில் இது புதிய விஷயம் அல்ல. முன்பு கூட நடந்திருக்கிறது.
நான் எனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications