வராத கணவன்-வருந்திய மனைவிகாவல் நிலையத்தில் பஞ்சாயத்து!
சென்னை:கல்யாணமாகி ஒன்றரை வருடங்களாகியும் தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளாத கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஒரு பெண் காவல் நிலையத்தை அணுகியதால் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை சேலையூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்யாணம் நடந்தது. சீரும் சிறப்புமாக பெண் வீட்டார் கல்யாணத்தை நடத்தி புகுந்த வீட்டுக்கு பெண்ணை அனுப்பி வைத்தனர்.
கனவுகளோடு கணவன் வீட்டில் காலடி எடுத்து வைத்த அந்தப் பெண்ணுக்கு முதலிரவிலேயே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆசையுடன் வருவார், அரவணைப்பார், இனிமையாக வாழ்க்கையைத் தொடங்கலாம் என காத்திருந்த அந்தப் பெண்ணுக்கு முதல் நாளே அதிர்ச்சிதான்.
டயர்டாக உள்ளது என்று கூறி விட்டு சுருண்டு படுத்துத் தூங்கி விட்டார் அந்தப் பெண்ணின் கணவர். அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு அந்தப் பெண்ணும் அமைதியானார்.
ஆனால் அடுத்த நாளும் இதே கதைதான். ஆனால் வேறு காரணத்தைக் கூறினார் மாப்பிள்ளை. இப்படியாக கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களை சும்மாவே கழித்து விட்டாராம் அந்த மாப்பிள்ளை.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்தப் பெண் பொங்கி எழுந்து பிறந்த வீட்டுக்குப் போய் விட்டார். தற்போது தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.
ஒன்றரை வருடங்களாகியும் உறவு ஏதும் இல்லை. தாம்பத்ய வாழ்க்கைக்கு எனது கணவர் தகுதியானவர் இல்லை என்று உணர்கிறேன். அதை மறைத்து என்னைக் கட்டி வைத்து விட்டனர்.
எனவே கணவர் மற்றும் அவரது வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்யாணத்திற்கு செய்த செலவுகளைத் திருப்பித் தர வேண்டும் என்று காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார் அந்தப் பாவப்பட்ட பெண்.
என்னடா இது நூதன வழக்காக இருக்கிறதே என்று குழம்பிப் போன போலீஸார், மணமகன் வீட்டாரை அழைத்து விசாரித்தனர். அப்போது மணமகனின் தந்தை, விரைவில் எல்லாம் சரியாகி விடும் என்று சமாதானம் கூறியுள்ளார்.
இதையடுத்து மாப்பிள்ளை, பெண் ஆகியோரை அழைத்து கவுன்சிலிங் கொடுத்து இணைந்து வாழுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர் போலீஸார்.
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ?












Click it and Unblock the Notifications