ஷெகாவத்துக்கு ஆதரவு திரட்டவில்லை: ஜெ.
சென்னை:குடியரசுத் தலைவர் தேர்தலில் பைரான் சிங் ஷெகாவத்துக்கு ஆதரவாக தான் யாருடனும் பேசவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை
குடியரசுத் தலைவர் தேர்தலில் துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத்துக்கு ஆதரவாக நான் ஈடுபட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்தை உருவாக்க பாடுபடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக நான் பஞ்சாப், பீகார், ஒரிசா மாநில முதல்வர்களுடன் பேசினேன் என்றும், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடனும் ஆலோசனை நடத்தினேன் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த செய்திகளை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். இது உண்மைக்குப் புறம்பானது, அடிப்படை இல்லாதது.
பல கட்சிகளை உள்ளடக்கிய ஒரு தனி அணியின் முக்கிய கட்சியாக அதிமுக விளங்குகிறது. இந்த முன்னணியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சமீபத்தில் ஹைதராபாத்தில் சந்தித்துப் பேசினோம். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.
அது ஒரு பூர்வாங்க கூட்டம்தான் என்றும், சென்னையில் நடக்கும் அடுத்த கூட்டத்தில், தான் முடிவு எடுக்கப்படும் என்றும் தெளிவாக நான் கூறியுள்ளேன்.
முன்னணியின் அடுத்த கூட்டம் 18ம் தேதி திங்கள்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இதில், முலாயம் சிங் யாதவ், சந்திரபாபு நாயுடு, ஓம் பிரகாஷ் செளதாலா, பாபுலால் மராண்டி, பங்காரப்பா, பிருந்தாவன் கோஸ்வாமி, அமர்சிங், வைகோ, பி.சி.தாமஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அது முறைப்படி தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
மூன்றாவது அணியின் சார்பில் பரூக் அப்துல்லாவை வேட்பாளராக நிறுத்த முயற்சிகள் நடப்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications