ஆஸி-பாக் அணிகள் இந்தியா வருகை
டெல்லி:ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் இந்தியாவில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன.
ஆஸ்திரேலியா செப்டம்பர் 25ம் தேதியும், பாகிஸ்தான் நவம்பர் 2ம் தேதியும் இந்தியா வருகின்றன. ஆஸ்திரேலியா 7 ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ளது. அக்டோபர் 17ம் தேதி வரை சுற்றுப் பயணம் செய்கிறது.
பாகிஸ்தான் 5 ஒரு நாள் போட்டிகளில் கலந்து கொள்கிறது. 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. டிசம்பர் 13ம் தேதி வரை சுற்றுப் பயணம் செய்கிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிகள் ஜெய்ப்பூர், கான்பூர் மொகாலி, பரீதாபாத், குவாலியர் ஆகிய இடங்களில் நடக்கவுள்ளன.
டெஸ்ட் போட்டிகள் டெல்லி, கொல்கத்தா, பெங்களூரில் நடக்கின்றன.
மூன்று அணிகளுக்கும் இடையே 12 ஒரு நாள் போட்டிகள் நடந்தாலும் சென்னையில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கவில்லை. அதே நேரத்தில் பெங்களூரில் மட்டும் 2 போட்டிகள் நடக்கவுள்ளன.
இது கிரிக்கெட் வாரியத்தின் பாரபட்சத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், சுழற்சி முறையில் சென்னையில் வாய்ப்பு வழங்கவில்லை. அக்டோபர், நவம்பர் மாதம் மழை சீசன். தென்னாப்ரிக்க அணி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வரும் போது சென்னையில் நடக்கும் என்றார்.
சச்சினை முறியடிப்பேன்-பாண்டிங்
இதற்கிடையே டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிப்பேன் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டியில் அதிக சதம் எடுத்தவர் டெண்டுல்கர். இவர் 137 டெஸ்டில் பங்கேற்று 37 சதம் எடுத்துள்ளார். ஆனால் 33 வயதான ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் 33 சதம் மட்டுமே அடித்துள்ளார்.
110 டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ளார். பாண்டிங்கும், சச்சினுக்கும் 27 டெஸ்ட் மட்டுமே வித்தியாசம். பாண்டிங் டெஸ்ட் சராசரி 59.29, சச்சினின் சராசரி 55.44 உள்ளது.
இந் நிலையில் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில்,
சச்சின் டெண்டுல்கர் 37 சதம் எடுத்துள்ளார், நான் 33வது சதத்தில் இருக்கிறேன். அவர் என்னைவிட மூத்தவர், என்னை விட அவர் அதிக போட்டிகளில் விளையாடியுள்ளார். நானும் நீண்ட காலம் விளையாடும்போது அவருடைய சாதனையை முறியடிப்பேன். அந்த நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
வங்காள தேசத்துடன் விளையாடியபோது அதிக ரன்களை எடுத்தார். ஆனால் வலுவான அணிகளுடன் விளையாடியபோது அதிக ரன்கள் எடுக்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் தனது பேட்டிங் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
ஸ்டீல் வாக் ஓய்வு பெறும்போது கூட சிறப்பாக விளையாடினார், சிறந்த வீரராகவே இருந்தார். சச்சின் சிறந்த வீரர், ஆனால் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும்.
நாங்கள் தொடர்ந்து 3 உலக கோப்பை பெற்றது மகிழ்ச்சியானதாகும். 1999ம் வருடம் உலக கோப்பை பெற கடுமையாக போராட வேண்டியிருந்தது. தொடக்கத்தில் பல போட்டிகளில் தோற்றாலும் 2003ம் ஆண்டு உலக கோப்பையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. அதே நேரத்தில் நாங்கள் விளையாடி வருவதை எங்களால் நம்ப முடியாத வகையில் உள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications