மதுரை கலெக்டர், கமிஷனர், தேர்தல் அதிகாரியைமாற்ற உத்தரவு-தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை:மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை ஆணையர், தேர்தல் அதிகாரி உள்ளிட்டோரை உடனடியாக இடமாற்றம் செய்யும்படி தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மேற்குத் தொகுதியில் இடைத் தேர்தலை, நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. சமீபத்தில் மதுரையில் முதல்வரின் மகன் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் செய்த பெரும் ரகளையைத் தொடர்ந்து மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் வருவதால் தேர்தலின்போது எந்தவித பிரச்சினையும் ஏற்படாத வண்ணம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
3 உதவி ஆணையர்கள், 163 தலைமைக் காவலர்கள் உள்ளிட்டோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவரையே மாற்றுமாறு தேர்தல் ஆணையம் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள உத்தரவில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர், மாநகர காவல்துறை ஆணையர் சுப்ரமணியம், தேர்தல் நடத்தும் அதிகாரியான கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) நாராயணசாமி ஆகியோரை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றுமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மேலும், சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் ராமராஜன், தல்லாகுளம் உதவி ஆணையர் ராஜேந்திரன், தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோரையும் இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்க ஒவ்வொரு பதவிக்கும் 3 பேரை பரிந்துரை செய்யும்படியும் தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கலின்போது விதிமுறைகளுக்குப் புறம்பாக அரசியல் கட்சியினர் அதிக அளவில் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்திற்குள் நுழைந்ததை ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி நடந்த இந்த செயல்களை மாவட்ட நிர்வாகமும், பிற அதிகாரிகளும் பகிரங்கமாக மீறியுள்ளனர், அனுமதித்துள்ளனர். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையம் கடுமையாக கூறியுள்ளது.
இதேபோல, தேர்தல் விதிமுறைகளை மீறி அதிக அளவிலான ஆட்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பாக அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடியான நடவடிக்கையால் மதுரை தேர்தல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது.
இதேபோல, தேர்தல் விதிமுறைகளை மீறி அதிக அளவிலான ஆட்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பாக அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடியான நடவடிக்கையால் மதுரை தேர்தல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications