ஜனாதிபதி: காங்.-இடது சாரி கூட்டணிவேட்பாளர் பிரதீபா பாட்டீல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடது சாரிகள் சார்பில் ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதீபா பாட்டீல் நிறுத்தப்படுகிறார். இதுதொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை வெளியிட்டார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் இதுவரை முக்கிய அரசியல் கூட்டணிகள் வேட்பாளரை இறுதி செய்யாமல் இருந்தன.

Prathibapatil

குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், அதற்கு ஆதரவாக உள்ள இடது சாரிக் கூட்டணிக்கும் இடையே வேட்பாளரை இறுதி செய்வதில் பெரும் குழப்பமும், பூசலும் நிலவியது.

முதலில் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலை காங்கிரஸ் கட்சி பரிந்துரைத்தது. ஆனால் அதை இடதுசாரிகள் ஏற்கவில்லை. தேசியவாத காங்கிரஸும் அதை ஏற்கவில்லை. முக்கிய கூட்டணிக் கட்சியான திமுகவும் ஏற்கவில்லை.

அதேபோல கரண் சிங், பிரணாப் முகர்ஜி, சுசில்குமார் ஷிண்டே ஆகியோரின் பெயர்களையும் இடதுசாரிகள் நிராகரித்துவிட்டன.

இந்த நிலையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், இடதுசாரித் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினர். முதல்வர் கருணாநிதியும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் சிவராஜ் பாட்டீலை நிறுத்தும் முடிவைக் கைவிட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒத்துக் கொண்டது. மேலும் இன்னொரு மத்திய அமைச்சரான சுஷில் குமார் ஷிண்டேவையும் நிறுத்துவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இவர்களை விட்டு விட்டு பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், இடதுசாரித் தலைவர்களும் கூட்டாக முடிவு செய்தன.

யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது ராஜஸ்தான் ஆளுனரும், முன்னாள் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவருமான பிரதீபா பாட்டீல், பிரபல காந்தியலாளரும், சமூக சேவகியுமான நிர்மலா தேஷ்பாண்டே, மூத்த தலைவர்களில் ஒருவரான மோஷினா கித்வாய் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

இதில் பிரதீபா பாட்டீலின் பெயரை பிரதமர் மன்மோகன் பரிந்துரைத்தார். இதை சோனியா காந்தி மற்றும் கூட்டணித் தலைவர்கள், இடது சாரித் தலைவர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடது சாரிகளின் ஒருமித்த வேட்பாளராக பிரதீபா பாட்டீல் நிறுத்தப்படுவதாக முறைப்படி அறிவித்தார். இந்திய அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம் என்றும் அவர் தெரிவித்தார்.

71 வயதாகும் பிரதீபா பாட்டீல், மகாராஷ்டிர மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆவார். ஐந்து முறை மகாராஷ்டிர மாநில சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லோக்சபா, ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்துள்ளார். ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவர் பதவியையும் வகித்துள்ளார்.

வழக்கறிஞரான பிரதீபா பாட்டீல், ராஜஸ்தான் மாநில ஆளுநராக தற்போது உள்ளார். அம்மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் பிரதீபா பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, ராஜஸ்தான் மாநில அரசு, சட்டசபையில் இயற்றிய கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத் திருத்த மசோதாவில் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரதீபா பாட்டீல்.

சமூக சேவகியான பிரதீபா பாட்டீல், ஏழைகள், உடல் ஊனமுற்றோருக்காக பல்வேறு பயிற்சி நிலையங்களையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+