ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்-சந்திரபாபு நாயுடு
ஹைதராபாத்:ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
சிவாஜி படத்தின் தெலுங்கு பதிப்பு நாயுடு உள்ளிட்ட விஐபிக்களுக்கு சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் படத்தைப் பார்த்தார் நாயுடு. அப்போது ரஜினியும் உடனிருந்தார்.படக் காட்சி முடிந்தபின் நிருபர்களிடம் பேசிய நாயுடு,
இந்தப் படம் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. கருப்புப் பணத்தின் தீமை படமாக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஸ்டைல்கள் அனைவரையும் கவரும். படம் வரலாற்றில் இடம் பெறும்.
ரஜினி என் நீண்ட நாள் நண்பர். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என பலமுறை கூறியிருக்கிறேன். இப்போதும் மூன்றாவது அணிக்கு வர வேண்டும் என அழைக்கிறேன்.
(இந்த அணிக்குத் தலைவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது).
வந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஆனால், முடிவெடுக்க வேண்டியது ரஜினி தான் என்றார் நாயுடு.
பின்னர் ரஜினி பேசுகையில்,
நாயுடு என் மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவர். அவரால் சந்திரமுகியை பார்க்க முடியாமல் போய்விட்டது. இதனால் சிவாஜியை பார்க்க அழைத்தேன். நான் இப்போது அவருடன் அரசியல் பேச வரவில்லை. எனக்கு ஆதரவளித்த நாயுடுவுக்கு நன்றி என்றார்.












Click it and Unblock the Notifications