கிரகலட்சுமிக்கு முதல் கல்யாணம்நடந்தது உண்மைதான்: சாட்சிகள்
சென்னை:கிரகலட்சுமிக்கும், வேணுகோபால் பிரசாத் என்பவருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது உண்மைதான், நாங்கள் சாட்சிக் கையெழுத்துப் போட்டதும் உண்மைதான் என்று சாட்சிக் கையெழுத்துப் போட்ட 3 வக்கீல்களும் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பிரஷாந்த், கிரகலட்சுமி இருவருக்கும் சென்னையில் கோலாகலமாக கல்யாணம் நடந்தது. ஆனால் ஒரு வருடத்திலேயே அவர்களது மண வாழ்க்கை கசந்து போனது. குழந்தை பெற்றுக் கொள்வதற்காக தாய் வீட்டுக்குப் போன கிரகலட்சுமி மீண்டும் பிரஷாந்த் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை.இந்த நிலையில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி பிரஷாந்த், குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், கிரகலட்சுமி மீது பிரஷாந்த் சில நாட்களுக்கு முன்பு பரபரப்புக் குற்றச்சாட்டை சுமத்தினார். தனது மனைவிக்கும், நாராயணன் வேணு பிரசாத் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாகவும், அதை மறைத்து விட்டு தனக்கு கிரகலட்சுமியைக் கட்டி வைத்து விட்டதாகவும் பிரஷாந்த் கூறினார். இதுதொடர்பான பதிவுச் சான்றிதழ் நகலையும் அவர் ஆதாரமாக காட்டினார்.
ஆனால் இதை கிரகலட்சுமி மறுத்தார். பிரஷாந்த் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது வக்கீல் சுதா ராமலிங்கம் எச்சரித்தார். காவல்துறை துணை ஆணையர் பாஸ்கரனிடம் பிரஷாந்த் மீது வாய்மொழியாக புகாரும் கொடுத்தார் கிரகலட்சுமி.
அதேபோல பிரஷாந்த்தும் தனது தந்தையோடு பாஸ்கரனை சந்தித்து வாய் மொழிப் புகார் கொடுத்தார். இதையடுத்து இருவரது வாய்மொழிப் புகார்களை அடிப்படையாக வைத்து போலீஸார் விசாரணை தொடங்கியுள்ளனர்.
நேற்று பிரஷாந்த் காட்டிய பதிவுச் சான்றிதழ் ஆவணத்தில், சாட்சிக் கையெழுத்துப் போட்ட சந்திரசேகர், ராஜேஷ், சங்கர் ஆகியோரை வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. மூன்று பேருமே வழக்கறிஞர்கள் ஆவர்.
நேற்று மாலை மாம்பலம் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் பெண் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றார். அப்போது அவர்கள் கொடுத்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரகலட்சுமியும், வேணு பிரசாத்தும் காதலித்துள்ளனர். பின்னர் இருவரும் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கு சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டும் என்று அழைத்ததால் நாங்கள் கையெழுத்துப் போட்டோம் என்று மூன்று பேரும் கூறியுள்ளனர்.
கிரகலட்சுமிக்கு முதல் கல்யாணம் நடந்தது உண்மைதான் என்று மூன்று பேரும் கூறியிருப்பதால் இந்த வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று பதிவுத் திருமணச் சான்றிதழ் ஆவணம் உண்மையானதா என்பதை கண்டறிய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அனேகமாக அதுவும் உண்மையானதாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
வழக்கை வாபஸ் பெறுகிறார் பிரஷாந்த்:
இந்த பரபரப்பான சூழ்நிலையில், குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் பிரஷாந்த்தும், அவரது மனைவி கிரகலட்சுமியும் நேரில் ஆஜராகினர்.
தாய் வீட்டுக்குச் சென்று விட்ட மனைவி கிரகலட்சுமியை சேர்த்து வைக்கக் கோரி நடிகர் பிரஷாந்த் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், தனது மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று கூறி புது குண்டைப் போட்டார் பிரஷாந்த்.
இந்த நிலையில் பிரஷாந்த் தாக்கல் செய்த வழக்கு இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பிரஷாந்த்தும், கிரகலட்சுமியும் நேரில் ஆஜராகினர்.
பின்னர் பிரஷாந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன் வாதிடுகையில், மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி பிரஷாந்த் முன்பு தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும்.
கிரகலட்சுமி ஏற்கனவே திருமணமானவர். எனவே அவருக்கு மாதந்தோறும் ரூ. 1 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க முடியாது. இதுதொடர்பாக கிரகலட்சுமி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 3ம் தேதிக்கு அதை ஒத்தி வைத்தார். பின்னர் வெளியே வந்த பிரஷாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு நடந்தது போல வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்று கூறி விட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications