உங்களுடன் அரசியல் நடத்த வேதனைபடுகிறேன்: விஜயகாந்த்
மதுரை: பெரியார், அண்ணா போன்றவர்களுடன் அரசியல் நடத்திவிட்டு இவர்களுடன் அரசியல் நடத்த வேதனையாக இருக்கிறது என முதல்வர் கருணாநிதி கூறுகிறார். சட்டசபையில் அவருடன் அரசியல் நடத்த எனக்கும் வேதனையாக உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரை மேற்கு தொகுதி பிரச்சாரத்தில் அவர் பேசுகையில்,
திமுக, அதிமுக கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக புகார் கொடுத்து வருகின்றனர். இதை பத்திரிக்கைகள் சொல்கின்றன. அவர்கள் பணம் கொடுத்தால் தாராளமாக வாங்கி கொள்ளுங்கள். அது லஞ்சமாக பெற்ற பணம். ஊழல் செய்து சம்பாதித்த பணம்.
காமராஜர், எம்ஜிஆர் காலத்தில் மக்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தினார். கருணாநிதி 5 முறையும், ஜெயலலிதா 2 முறையும் முதல்வராக இருந்திருக்கின்றனர். இவர்கள் ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தனர். தங்களது சாதனைகளை சொல்ல முடியாமல் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்க முயல்கின்றனர்.
இரவு நேரத்தில் சைக்கிளில் செல்பவர்களிடம் விளக்கு இல்லை என போலீஸார் மக்களிடம் பணம் பறிப்பதை அறிந்த எம்ஜிஆர் அந்த திட்டத்தை ரத்து செய்தார். ஆனால் இப்போது ஹெல்மெட் திட்டம் கொண்டு ஏழை மக்களை சிரமமப்படுத்துகின்றனர்.
நாங்கள் புதிய ரத்தம், புதிய சிந்தனை, புதிய கொள்கையுடையவர்கள். அவர்கள் பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள். அது உங்கள் வரிப்பணம் தான். ஆனால் உங்களை ஓட்டு முரசு சின்னத்திற்குதான் என்ற கொள்கையோடு இருங்கள்.
என் மனைவி பிரச்சாரம் செய்யும்போது மாணவர்கள் பாடப் புத்தகம் கிடைக்கவில்லை என கூறியுள்ளனர். இன்று விலைவாசி அதிகரித்துவிட்டது. சிமெண்ட் விலையும் ஏறியதால் தொழிலாளர்களும் ஏழைகளும் பாதிக்கப்படுகின்றனர்.
சட்டசபையில் முதல்வர் வேதனையுடன், நான் காமராஜர், பக்தவச்சலம், பெரியார் போன்றவர்களுடன் அரசியல் நடத்தியிருக்கிறேன். இப்போது இவர்களுடன் நடத்த வேண்டியுள்ளதே என்று கூறினார்.
இப்போது நானும் சட்டசபையில் உங்களுடன் இருப்பதற்கு வேதனைப்படுகிறேன். பலமுறை ஆட்சிக்கு வந்தும் மக்களுக்காக ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு, தேர்தல் வந்ததும் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதை கண்டு வேதனைபடுகிறேன்.
நான் உங்களுக்காக நடித்துக் கொண்டேயிருப்பேன். விஜயகாந்த் வாழ்ந்தான் என வரலாறு கூற வேண்டும். அதனால் முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
சர்ச்- மனைவியுடன் ஓட்டு வேட்டை:
முன்னதாக நரிமேடு பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கதீட்ரல் தேவாலய வாசலுக்கு பிரேமலதா சகிதம் சென்ற விஜய்காந்த், ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை முடித்துவிட்ட வந்த மக்களிடம் கும்பிடு போட்டு ஓட்டு சேகரித்தார்.
அங்கிருந்த குழந்தைகள், பெரியோர்களுக்கு விஜயகாந்த்தும் அவருடைய மனைவியும் சால்வை அணிவித்தனர்.
மேற்கு தொகுதியில் போட்டியிடும் இந்தியன் கிறிஸ்டியன் லீக் தலைவர் ஜான் பிரிட்டோ விஜயகாந்திடம் ஆதரவு கேட்டபோது, தனக்கும் தன் மனைவி்க்கும் அந்த தொகுதியில் ஓட்டு கிடையாது என சிரித்தவாறு கூறினார்.
அதே போல பாஜக வேட்பாளர் சசிராமனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் இல.கணேசன் மற்றும் நிர்வாகிகளும் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.












Click it and Unblock the Notifications