ஒருமனதாக தேர்ந்தெடுத்தால் மீண்டும் போட்டியிடதயார்: 3வது அணியிடம் கலாம் தகவல்
டெல்லி:ஜனாதிபதி தேர்தலில் கட்சிகள் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு ஒரே வேட்பாளராக தான் நிறுத்தப்பட்டால் மீண்டும் போட்டியிட அப்துல் கலாம் தயாராக இருப்பதாக அவரை சந்தித்துவிட்டுத் திரும்பிய மூன்றாவது அணியின் முக்கிய தலைவரான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங், பொதுச் செயலாளர் அமர் சிங், இந்திய தேசிய லோக் தள் தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, அஸ்ஸாம் கண பரிஷத் தலைவர் பிருந்தாவன் கோஸ்வாமி உள்ளிட்ட ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் இன்று பிற்பகலில் குடியரசுத் தலைவர் மாளிகையில் கலாமை சந்த்துப் பேசினர்.
ஆனால், இந்திய முக்கிய சந்திப்பில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும் கலந்து கொள்ளவில்லை.
அவருக்குப் பதிலாக தம்பிதுரை, மலைச்சாமி, மைத்ரேயன் ஆகியோர் சென்றனர்.
குடியரசுத் தலைவரை சந்தித்து விட்டு வெளியே வந்த பின்னர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில்,
குடியரசுத் தலைவரை சந்தித்து, சென்னையில் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்தில் கலாம் மறுபடியும் போட்டியிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதை குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தோம்.
மீண்டும் போட்டியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். அதைக் கேட்டுக் கொண்ட குடியரசுத் தலைவர், எனக்கும் இதுகுறித்து ஆயிரக்கணக்கான இ மெயில்கள் வருகின்றன. நாட்டு மக்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கும், பாசத்துக்கும் நான் மிகுந்த பெருமிதப்படுகிறேன்.
ஆனால் இந்தத் தேர்தலில் நிச்சயமான நிலை உருவானால் ("only if there is certainty") தான் மீண்டும் போட்டியிடத் தயார் என கலாம் கூறினார்.
எனவே அப்துல் கலாமை மீண்டும் தேர்ந்தெடுக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் முன்வர வேண்டும். கலாமுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் நாயுடு.
நிச்சயமான நிலை உருவானால் என்று கலாம் கூறியிருக்கிறாரே இதற்கு என்ன அர்த்தம் என நிருபர் கேட்டதற்கு, அதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள், இதில் எல்லா பதிலும் அடங்கியிருக்கிறது என பதிலளித்தார் நாயுடு.
இதையடுத்து கலாம் என்ன தான் சொல்லியிருப்பார் என்று அரசியல் பார்வையாளர்கள் இடையே யூகங்கள் தொடங்கியிருக்கின்றன. ஒருமித்த கருத்தோடு தன்னை தேர்வு செய்ய அனைத்துக் கட்சிகளும் முன் வந்தால் மட்டுமே மீண்டும் போட்டியிட நான் தயார் என்பதைத் தான் கலாம் இவ்வாறு தெரிவித்திருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும் தனது வெற்றி நிச்சயம் என்று உறுதியானால் மட்டுமே போட்டியிடுவேன் என்ற கருத்திலும் கலாம் அவ்வாறு கூறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஆனால், பிரதீபா பாட்டீலின் மனுவை முன்மொழிந்து பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா, முதல்வர் கருணாநிதி உள்ளிட்டவர்கள் கையெழுத்து போட்டுவிட்ட நிலையில், கலாமை ஆதரிக்க முடியாது என சிவசேனை கூறியுள்ள நிலையில் அவரை இனி பொது வேட்பாளராக கட்சிகள் அறிவிப்பது என்பது அவ்வளவு எளிதில் சாத்தியமல்ல.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற அப்சல் குரு பொது மன்னிப்பு கோரி கொடுத்த மனுவை கலாம் நிராகரிக்காததால் அவர் மீது கடுப்பில் உள்ளார் சிவசேனை தலைவர் பால் தாக்கரே. இந்த விஷயத்தில் கலாமை மிகக் கடுமையாக அவர் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கலாமை ஏன் ஆதரிக்கப் போகிறோம்.. அவருக்கு என் மனதில் இடம் இல்லை என நேற்று நிருபர்களிடம் தாக்கரே கூறினார். மேலும் தனது கூட்டணிக் கட்சியான பாஜக நிறுத்தியுள்ள பைரோன் சிங் ஷெகாவத்தை ஆதரிக்காமல் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபாவை ஆதரிக்கவுள்ளார் தாக்கரே (பிரதீபா மராட்டியர் என்பதால்)
இதன் மூலம் மூன்றாவது அணியின் சார்பில் கலாம் போட்டியிடும் வாய்ப்பு மிகவும் மங்கிப் போயுள்ளது.












Click it and Unblock the Notifications