பிரதீபா வேட்பு மனுவை முன்மொழிந்துபிரதமர், சோனியா, கருணாநிதி கையெழுத்து
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீபா பாட்டீலின் வேட்பு மனுவை முன்மொழிந்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். முதல்வர் கருணாநிதியிடம் கையெழுத்து வாங்க வேட்பு மனுவுடன் சென்னைக்கு விரைகிறார் அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடது சாரிகளின் வேட்பாளராக பிரதீபா பாட்டீல் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் ஜூலை 23ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.
![]() |
இந்த நிலையில் அவரது வேட்பு மனுவைத் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக வேட்புமனுவில் பிரதீபா பாட்டீலை முன்மொழிந்து தலைவர்கள் கையெழுத்திடும் வேலை தொடங்கியுள்ளது.
வேட்பு மனுவில் முதல் நபராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளார். அவரிடம் மத்திய அமைச்சர்கள் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, சுரேஷ் பச்சோரி ஆகியோர் சென்று கையெழுத்தைப் பெற்றனர். இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் 2வது முன்பொழிபவராக கையெழுத்திட்டார்.
அப்போது பிரதீபா பாட்டீலும் உடன் இருந்தார். மொத்தம் 100 எம்.பிக்களிடம் வேட்பு மனுவில் முன்மொழிந்து கையெழுத்துப் பெறப்படவுள்ளது.
கருணாநிதி 3வதாக கையெழுத்து ..
பிரதமர் மற்றும் சோனியா காந்தியிடம் கையெழுத்தைப் பெற்ற பின்னர் அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி சென்னைக்கு விரைந்து வந்தார்.
முதல்வர் கருணாநிதியை சந்தித்த அவர், 3வதாக கருணாநிதி முன்மொழிந்து கையெழுத்திட வேண்டும் என்று கோரினார். இதை ஏற்று முதல்வர் கருணாநிதியும், வேட்பு மனுவில் பிரதீபாவின் பெயரை முன்மொழிந்து கையெழுத்திட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முன்ஷி பேசுகையில், முதல்வர் கருணாநிதி 3வதாக கையெழுத்திட வேண்டும் என்பது கூட்டணித் தலைமையின் விருப்பம். அதன்படி முதல்வரிடம் கையெழுத்து பெற சென்னைக்கு வந்தேன்.
எங்களது வேட்பாளர் பெரும் வெற்றி பெறுவார். பிரதீபா பாட்டீலுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள் மட்டுமல்லாமல் பிற கட்சிகளிடமிருந்தும் ஆதரவு கிடைக்கும் என்றார்.
பிரதீபா பாட்டீலை வேட்பாளராக தேர்வு செய்ததில் தமிழக முதல்வர் கருணாநிதி பெரும் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications